கடலூரில் மீனவர் கொலை வழக்கில் மகளின் காதலன் கைது


கடலூரில் மீனவர் கொலை வழக்கில் மகளின் காதலன் கைது
x
தினத்தந்தி 24 April 2021 10:21 PM IST (Updated: 24 April 2021 10:21 PM IST)
t-max-icont-min-icon

கடலூரில் மீனவர் கொலை வழக்கில் மகளின் காதலன் கைது செய்யப்பட்டார். காதலியை வேறொருவருக்கு திருமணம் செய்ய ஏற்பாடு செய்ததால் கொன்றதாக வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.

கடலூர், 

கடலூர் தாழங்குடா சுனாமி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 65), மீனவர். இவர் தனது மகளுக்கு திருமண நிச்சயதார்த்தம் செய்ய ஏற்பாடுகள் செய்து வந்தார். இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன், தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் தனது மூத்த மகள் வீட்டுக்கு சென்று நிச்சயதார்த்த செலவுக்கு ரூ.10 ஆயிரம் வாங்கிக்கொண்டு தாழங்குடா புறப்பட்டார். ஆனால் அன்று இரவு நீண்ட நேரமாகியும் அவர், வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை தாழங்குடா அருகில் கண்டக்காடு- குண்டுஉப்பலவாடி சாலையோரம் சுப்பிரமணியன் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவனாம்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

காதலன் கைது 

விசாரணையில் கடலூர் சுத்துக்குளத்தை சேர்ந்த முருகன் மகன் ராஜசேகர் (27), வேல்முருகன் மகன் குகன் (24) ஆகியோர் சுப்பிரமணியனை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது ராஜசேகர், போலீசில் அளித்த வாக்குமூலத்தில் கூறியிருந்ததாவது:- 

நானும், சுப்பிரமணியனின் மகளும் கடலூரில் உள்ள தனியாா் கல்லூரியில் எம்.எஸ்சி. படித்தோம். அப்போது இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலித்து வந்தோம். தற்போது வசந்தராயன்பாளையத்தில் உள்ள அங்காளம்மன் கோவிலில் பூசாரியாக இருந்தேன். 

கல்லூரியில் காதல் 

நான், எனது காதலியை திருமணம் செய்து கொள்வதற்காக அவரது வீட்டிற்கும், தேவனாம்பட்டினத்தில் வசிக்கும் அவரது அக்காள் வீட்டிற்கும் சென்று பெண் கேட்டேன். அதற்கு அவர்கள் பெண் கொடுக்க மறுப்பு தெரிவித்து விட்டனர். அதுமட்டுமின்றி சுப்பிரமணியன், அவரது மகளுக்கு வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயம் செய்ய ஏற்பாடு செய்தார்.
இதுபற்றி அறிந்த நான், மீண்டும் அவரிடம் பெண் கேட்க முடிவு செய்து, செல்போனில் அவரை தொடர்பு கொண்டேன். அப்போது அவர் தேவனாம்பட்டினம் சென்று விட்டு வீட்டுக்கு தி்ரும்பி செல்வதாக கூறினார். உடனே நான் எனது நண்பரின் காரை வாங்கிக்கொண்டு உறவினரான குகனுடன் மஞ்சக்குப்பம் மணிக்கூண்டு அருகில் காரில் காத்திருந்தோம். 

உடலை சாலையோரம் வீசினோம்

அங்கு வந்த சுப்பிரமணியனிடம், உங்கள் மகள் திருமணம் குறித்து பேச வேண்டும் என்று கூறி அவரை காரில் அழைத்துக் கொண்டு கேப்பர் மலை பகுதிக்கு சென்றோம். அப்போது அவரிடம், உங்கள் மகளை எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என கேட்டேன். அதற்கு அவர் எனது மகளை கொன்று போட்டாலும் போடுவேனே தவிர, உனக்கு திருமணம் செய்து கொடுக்க மாட்டேன் என்றார். 

இதனால் ஆத்திரமடைந்த நான், குகனுடன் சேர்ந்து சுப்பிரமணியனின் முகத்தில் துணியை வைத்து அமுக்கி கொலை செய்தேன். பின்னர் அவரது உடலை கண்டக்காடு-குண்டுஉப்பலவாடி சாலையோரம் வீசி விட்டு சென்று விட்டோம். இவ்வாறு அவரது வாக்குமூலத்தில் கூறி உள்ளார். 

Next Story