பக்தர்கள் இன்றி ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம்


பக்தர்கள் இன்றி ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம்
x
தினத்தந்தி 25 April 2021 12:50 AM IST (Updated: 25 April 2021 12:50 AM IST)
t-max-icont-min-icon

மானாமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் இன்றி ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின்னர் முககவசம் அணிந்த பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

மானாமதுரை,

மானாமதுரையில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் இன்றி ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நடந்தது. அதன்பின்னர் முககவசம் அணிந்த பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

உள்திருவிழா

மதுரைக்கு அடுத்தப்படியாக மானாமதுரையில் ஆனந்தவல்லி, சோமநாதர் சித்திரை திருவிழா பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாைவ பார்க்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவார்கள்.
தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கோவில் திருவிழாக்களுக்கு அரசு தடை விதித்து உள்ளது. இதையடுத்து உள்திருவிழாவாக நடத்தி கொள்ளலாம் என அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 17-ந்தேதி முதல் கொடியேற்றத்துடன் ஆனந்தவல்லி, சோமநாதர் கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடத்தப்படுகிறது. பூஜைகள் நடைபெறும் போது பக்தர்களுக்கு அனுமதி கிடையாது.

திருக்கல்யாணம்

இந்த நிலையில் திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியான ஆனந்தவல்லி, சோமநாதர் திருக்கல்யாணம் நேற்று காலை 10.52 மணிக்கு நடந்தது. முன்னதாக ஆனந்தவல்லி, சோமநாதர், பிரியாவிைடயுடன் திருக்கல்யாணம் மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.
அங்கு சிவாச்சாரியார்கள் ராஜேஸ், சக்கரை பட்டர், பரத்வாஜ் ஆகியோர் வேத மந்திரங்கள் முழங்க ஆனந்தவல்லி, சோமநாதருக்கு திருக்கல்யாணத்தை நடத்தி வந்தனர். திருக்கல்யாணம் நடந்த போது பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இதனால் பக்தர்கள் இன்றி திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
திருக்கல்யாணம் முடிந்த பின்னர் மதியம் 12 மணி முதல் பகல் 2 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடித்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Next Story