அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை; மந்திரி சுதாகர் எச்சரிக்கை
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மந்திரி சுதாகர் எச்சரித்துள்ளார்.
பெங்களூரு:
பெங்களூருவில் நேற்று சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது-
கடுமையான நடவடிக்கை
பெங்களூரு உள்பட மாநிலம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளும் முழு வீச்சில் நடந்து வருகிறது. தீவிர கண்காணிப்பு பிரிவுகளில் படுக்கைகள் பற்றாக்குறை, ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதால், கொரோனா அறிகுறி உள்ள நோயாளிகளை மட்டுமே மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகளை மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க அனுமதி வழங்கப்படவில்லை. அதையும் மீறி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அறிகுறி இல்லாத கொரோனா நோயாளிகளை அனுமதித்து சிகிச்சை அளித்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசியல் பிரபலங்களாக...
கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் அரசியல் பிரபலங்களாக இருந்தாலும் சரி, பெரிய தொழில் அதிபர்களாக இருந்தாலும் சரி, அவர்களை எக்காரணத்தை கொண்டும் மருத்துவமனைகளில் அனுமதித்து சிகிச்சை அளிக்க கூடாது. யாருடைய அழுத்தத்திற்கும் மருத்துவமனை நிர்வாகம் அடிபணிய வேண்டிய அவசியமில்லை. கொரோனா அறிகுறி இல்லாத நோயாளிகள் 82 சதவீதம் பேர் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். நேற்று (நேற்று முன்தினம்) மட்டும் 74 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகும் 3 முதல் 5 சதவீதம் பேருக்கு மட்டுமே மூச்சு திணறல் உள்ளிட்ட பாதிப்பு ஏற்படுகிறது. எனவே அறிகுறி இல்லாதவர்கள் பயப்பட வேண்டிய அவசியமில்லை. மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற வேண்டிய அவசியமும் இல்லை. தனியார் மருத்துவமனைகளில் தற்போது 50 சதவீத படுக்கைகள் ஒதுக்கீடு செய்யப்படுவதை, 80 சதவீதமாக உயர்த்த உத்தரவிடப்பட்டு இருக்கிறது.
நிபுணர்கள் குழு பரிந்துரை
பெங்களூரு, சிவமொக்கா, மைசூரு, உப்பள்ளி, பெலகாவி உள்பட சில முக்கிய மாவட்டங்களில் ஐ.சி.யூ. வார்டுகளின் கூடுதலாக 200 படுக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்படுவதை தடுக்க பிரதமர் நரேந்திர மோடிக்கு கர்நாடக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. விரைவில் மத்திய அரசிடம் இருந்து ஆக்சிஜன் கிடைக்க உள்ளது. முதற்கட்ட கொரோனா பரவலின் போது 300 முதல் 350 டன் ஆக்சிஜன் தேவைப்பட்டது. தற்போது 500 டன் ஆக்சிஜன் தேவையாக உள்ளது.
கர்நாடகத்தில் ஒட்டு மொத்தமாக 1,414 லட்சம் மெட்ரிக் டன் ஆக்சிஜன் மே 1-ந் தேதிக்குள் தேவையாக இருக்கிறது. அதுபற்றி மத்திய அரசுக்கும் முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், ஐ.சி.யூ. வசதியுடன் 2 ஆயிரம் படுக்கைகள் கொண்ட கொரோனா மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க மாநில அரசு எடுத்து வரும் ஒவ்வொரு நடவடிக்கைகளிலும் நிபுணர்கள் குழுவின் பரிந்துரை படியே மேற்கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story