திருடர்களை ஸ்கூட்டரில் விரட்டிச்சென்ற கல்லூரி துணை முதல்வர் விபத்தில் பலி


திருடர்களை ஸ்கூட்டரில் விரட்டிச்சென்ற கல்லூரி துணை முதல்வர் விபத்தில் பலி
x
தினத்தந்தி 25 April 2021 2:18 AM IST (Updated: 25 April 2021 2:18 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சையில் தொழுகை முடிந்து வீட்டிற்கு சென்றபோது செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை ஸ்கூட்டரில் விரட்டிச் சென்ற கல்லூரி துணை முதல்வர் விபத்தில் சிக்கி பலியானார்.

தஞ்சாவூர்;
தஞ்சையில் தொழுகை முடிந்து வீட்டிற்கு சென்றபோது செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை ஸ்கூட்டரில் விரட்டிச் சென்ற கல்லூரி துணை முதல்வர் விபத்தில் சிக்கி பலியானார்.
கல்லூரி துணை முதல்வர்
தஞ்சை எல்.ஐ.சி. காலனி 2-வது தெருவை சேர்ந்தவர் பேராசிரியர் ஜியாவுதீன்(வயது 57). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள தனியார் கலைக்கல்லூரியில் ஜியாவுதீன், துணை முதல்வராக பணிபுரிந்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை இவர் தொழுகைக்காக வீட்டில் இருந்து ஸ்கூட்டரில் பள்ளிவாசலுக்கு சென்றார். யாகப்பா நகரில் உள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்து விட்டு தனது ஸ்கூட்டரில் வீட்டுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். 
செல்போன் பறிப்பு
எலிசா நகர் அருகே அவர் வந்தபோது அவரது செல்போன் மணி அடித்தது. உடனே ஜியாவுதீன் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தி விட்டு தனது செல்போனை எடுத்து பேசிக்கொண்டு இருந்தார். 
அப்போது அந்த வழியே மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் ஜியாவுதீனின் செல்போனை பறித்துச் சென்றனர். 
திருடர்களை விரட்டிச்சென்றார்
இதை சற்றும் எதிர்பார்க்காத அவர் அதிர்ச்சி அடைநது திருடன்திருடன் என சத்தம் போட்டார். பின்னர் தனது செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை பிடிப்பதற்காக ஜியாவுதீன் தனது ஸ்கூட்டரில் அவர்களை விரட்டிச் சென்றார். 
முனிசிபல் காலனி 1-வது தெருவில் சென்றபோது எதிர்பாராவிதமாக ரோட்டில் சறுக்கியதால் நிலை தடுமாறி அவர் ஸ்கூட்டரில் இருந்து கீழே விழுந்தார். இதில் பின்பக்க தலையில் அவருக்கு அடிபட்டது. படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த அவரை உடனடியாக சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
பரிதாப சாவு
அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தஞ்சை நகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், சப்-இன்ஸ்பெக்டர் தங்கராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். செல்போனை பறித்துச்சென்ற திருடர்களை விரட்டிச்சென்றபோது விபத்தில் சிக்கி கல்லூரி துணை முதல்வர் பலியான சம்பவம் தஞ்சையில் மிகுந்த பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story