கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு?; எடியூரப்பா தலைமையில் நாளை மந்திரிகள் ஆலோசனை
கர்நாடகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மந்திரிசபை கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கர்நாடகத்தில் மீண்டும் முன்புபோல் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட உள்ளது.
பெங்களூரு:
கொரோனா பரவல் அதிகரிப்பு
கர்நாடகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு, நாள் அதிகரித்து கொண்டே சென்ற வண்ணம் உள்ளது. மாநிலத்தில் தினமும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும், பெங்களூருவில் மட்டும் தினமும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அத்துடன் தினமும் 100-க்கும் மேற்பட்டோர் கொரோனாவுக்கு பலியாகி வருகின்றனர்.
மாநிலத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வார நாட்களில் இரவு நேர ஊரடங்கும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் மாநிலத்தில் கொரோனா பாதிப்பும், உயிர் பலியும் அதிகரித்து வருகிறது.
மந்திரிசபை கூட்டம்
இந்த நிலையில், கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்க நாளை (திங்கட்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் மந்திரிசபை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் முக்கியமாக 3 அம்சங்கள் குறித்து ஆலோசித்து இறுதி முடிவு எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா தீர்மானித்திருப்பதாக தெரிகிறது.
அதாவது கொரோனா பரவலை தடுக்க தற்போது வார விடுமுறை நாட்கள் மற்றும் இரவு நேரத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாடுகளை இன்னும் கடுமையாக்குவது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் விரிவாக ஆலோசித்து முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கர்நாடகத்தில் முன்புபோல் மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்துவது குறித்தும் மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
முழுமையான ஊரடங்கு
ஏற்கனவே முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம் என்று சில மந்திரிகள் வெளிப்படையாக கருத்துகளை கூறி வருகின்றனர். ஆனால் பெங்களூரு உள்பட மாநிலத்தில் தற்போது கொரோனா பரவல் கைமீறி சென்றுள்ளதால், முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தி, அவர்களது கருத்துகளையும் பெறுவதற்கு முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மீண்டும் முழுமையான ஊரடங்கை அமல்படுத்தினால் ஏற்படும் பொருளாதார பிரச்சினைகள், மக்கள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து மந்திரிகளுடன் விவாதித்து இறுதி முடிவு எடுக்க எடியூரப்பா தீர்மானித்திருக்கிறார். அதுபோல், கொரோனா விவகாரத்தால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்தும் மநதிரிசபை கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
இலவசமாக தடுப்பூசி?
கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்க ரூ.400 கோடிக்கு, ஒரு கோடி கொரோனா தடுப்பூசி வாங்க அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக வழங்குவதா? அல்லது கட்டணம் பெறுவதா? என்பது குறித்தும் மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது. கேரளா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று, அந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
இதன் காரணமாக கர்நாடகத்திலும் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசியை இலவசமாக வழங்குவதா? அல்லது வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் தடுப்பூசியை இலவசமாக வழங்குவதா? என்பது குறித்து மந்திரிசபை கூட்டத்தில் ஆலோசித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்க முதல்-மந்திரி எடியூரப்பா முடிவு செய்திருக்கிறார். இதனால் நாளை நடைபெற உள்ள மந்திரிசபை கூட்டம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story