நுங்கு விற்பனை அமோகம்
தா.பழூரில் நுங்கு விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தா.பழூர்:
வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில் தற்போது வெயில் சுட்டெரித்து வருகிறது. நாளுக்கு நாள் கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது.
இந்நிலையில் வெயிலின் தாக்கத்தை சமாளிக்க பழச்சாறு, குளிர்பானங்கள் போன்றவற்றை பொதுமக்கள் குடிக்கின்றனர். இதனால் குளிர்பான கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது.
நுங்கு விற்பனை
இதேபோல் நுங்குகளையும் பொதுமக்கள் விரும்பி வாங்கி சாப்பிடுகின்றனர். தா.பழூரில் நுங்கு விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஏராளமான பொதுமக்கள் ஆர்வத்துடன் நுங்கு வாங்கிச்செல்கின்றனர். நகர்ப்புறங்களில் 10 ரூபாய்க்கு 3 சுளைகள் விற்கப்படும் நிலையில், தா.பழூரில் 10 ரூபாய்க்கு 5 சுளைகள் விற்கப்படுகிறது. உடலின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் என்பதாலும், குறிப்பிட்ட கோடை காலத்தில் மட்டுமே பனை நுங்கு கிடைக்கும் என்பதாலும் விலையை பொருட்படுத்தாமல் பனை நுங்குகளை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர்.
பனை மரங்கள் வளர்க்க...
இது குறித்து நுங்கு விற்பனையாளர்கள் கூறுகையில், கடந்த 3 தலைமுறைகளாக நுங்கு வெட்டி விற்பனை செய்யும் தொழிலை கோடை காலங்களில் செய்து வருகிறோம். பனை மரங்களை குத்தகை எடுத்து நுங்கு விற்பனை செய்து வருகிறோம். கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நார் சத்து, நீர் சத்து உள்ளிட்ட பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக பனை நுங்கு உள்ளது. லாபம் இல்லாவிட்டாலும், ஒவ்வொரு வருடமும் நுங்கு விற்பனையை சேவை அடிப்படையில் தொடர்ந்து செய்ய விரும்புகிறோம்.
முன்பெல்லாம் ஆற்றங்கரையையொட்டி நிறைய பனைமரங்கள் தென்படும். தற்போது பனை மரங்களை பார்ப்பது அரிதாகிவிட்டது. மரங்களை தேடி அலைந்து கண்டுபிடிக்க வேண்டிய சூழல் உள்ளது. பெரும்பாலான மரங்கள் அழிந்துவிட்டன. பனை மரங்களை அதிகளவில் வளர்ப்பதற்கு அரசு மற்றும் விவசாயிகள் முன்வர வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story