நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 70 காசுகள் சரிவு


நாமக்கல் மண்டலத்தில் 3 நாட்களில் முட்டை விலை 70 காசுகள் சரிவு
x
தினத்தந்தி 25 April 2021 4:22 AM IST (Updated: 25 April 2021 4:24 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை கடந்த 3 நாட்களில் 70 காசுகள் சரிவடைந்துள்ளது.

நாமக்கல், 

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 450 காசுகளாக இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டையின் கொள்முதல் விலையை அதிரடியாக 35 காசுகள் குறைக்க முடிவு செய்தனர். எனவே முட்டை கொள்முதல் விலை 415 காசுகளாக சரிவடைந்து உள்ளது.

பிற மண்டலங்களில் முட்டை விலை காசுகளில் வருமாறு:- சென்னை-445, ஐதராபாத்-350, விஜயவாடா-380, மைசூரு-430, மும்பை-440, பெங்களூரு-430, கொல்கத்தா-420, டெல்லி-380.
கறிக்கோழி கிலோ ரூ.76-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை கிலோவுக்கு ரூ.2 உயர்த்த முடிவு செய்தனர். எனவே கறிக்கோழி விலை கிலோ ரூ.78 ஆக உயர்ந்து உள்ளது. முட்டைக்கோழி கிலோ ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

முழு ஊரடங்கு

முட்டை விலை சரிவு குறித்து தமிழ்நாடு முட்டைக்கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:-
கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்ற பயத்தில் பண்ணையாளர்கள் முட்டைகளை இருப்பு வைக்க விருப்பம் இல்லாமல் தினசரி உற்பத்தியாகும் முட்டைகளை அன்றே விற்பனை செய்து வருகின்றனர். பண்ணையாளர்கள் போட்டி போட்டு விற்பனை செய்வதால், வியாபாரிகள் அதை பயன்படுத்தி விலையை குறைத்து வாங்குகின்றனர். பிறமாநிலங்களிலும் முட்டை கொள்முதல் விலை குறைந்து உள்ளது.
குறிப்பாக ஐதராபாத் மண்டலத்தில் 350 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்யும் விலையில் இருந்து 40 காசுகள் வரை குறைத்து, வியாபாரிகள் வாங்குகின்றனர். கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறைந்து உள்ளதாலும், கோழிகள் 100 கிராம் வரை தீவனம் எடுத்துக் கொள்வதாலும், முட்டை உற்பத்தியும் 10 சதவீதம் அதிகரித்துள்ளது.

ரூ.30 கோடி இழப்பு

மேலும் முட்டை உற்பத்தி செலவு 450 காசுகளாக இருப்பதால், ஒரு முட்டைக்கு 75 காசுகள் முதல் ரூ.1 வரை நஷ்டம் ஏற்படுகிறது. ஒட்டு மொத்தமாக கடந்த 10 நாட்களில் பண்ணையாளர்களுக்கு ரூ.30 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
நாமக்கல் மண்டலத்தில் கடந்த 3 நாட்களில் மட்டும் முட்டை கொள்முதல் விலை 70 காசுகள் சரிவடைந்து இருப்பதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

Next Story