ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவரிடம் ரூ.13 லட்சம் மோசடி பெண் தட்டச்சர் கைது


ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவரிடம் ரூ.13 லட்சம் மோசடி பெண் தட்டச்சர் கைது
x
தினத்தந்தி 25 April 2021 10:51 AM IST (Updated: 25 April 2021 10:51 AM IST)
t-max-icont-min-icon

ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி பிரெஞ்சு குடியுரிமை பெற்ற முதியவரிடம் ரூ.13 லட்சம் மோசடி செய்ததாக பெண் தட்டச்சர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி, 

புதுவை கோலாஸ் நகரை சேர்ந்தவர் ஜேப்லி சரவணன் (வயது 75). பிரெஞ்சு குடியுரிமை பெற்றவரான இவர் தனது வீட்டை வாடகைக்கு விடுவது தொடர்பாக பத்திரங்கள் தயார் செய்ய ரங்கப்பிள்ளை வீதியில் உள்ள டைப்பிங் சென்டருக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனால் அங்கு தட்டச்சராக பணிபுரியும் புஷ்பராஜ் மனைவி சுகந்தி (39) என்பவர் அவருக்கு அறிமுகமானார். அப்போது அந்த முதியவரிடம் ஆன்லைன் மூலம் வர்த்தகம் செய்தால் அதிக பணம் கிடைக்கும் என்று அந்த பெண் கூறியுள்ளார். அதற்கான பணத்தை கூகுள் பே மூலம் போட்டால் மிகவும் சுலபமாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

இதற்கு சம்மதித்த அந்த முதியவர் தனக்கு கூகுள்பே எதுவும் தெரியாது என தெரிவித்த நிலையில் அந்த பணியை தன்னிடம் கொடுத்தால் செய்து தருவதாக சுகந்தி தெரிவித்துள்ளார். இதை நம்பிய ஜேப்லி சரவணன் தன்னிடம் இருந்த 2 வங்கி கிளைகளின் 4 ஏ.டி.எம். கார்டுகள் மற்றும் ரகசிய எண்களையும் கொடுத்துள்ளார்.

முதலில் ஜேப்லி சரவணன் கூறியபடி சிறிய தொகையை முதலீடு செய்து ஓரிரு மாதத்தில் சுகந்தி இரட்டிப்பாக்கி காட்டியுள்ளார்.

இதன்பின் சுகந்தி தனது சொந்த உபயோகத்துக்கு அந்த ஏ.டி.எம். கார்டுகளை பயன்படுத்த தொடங்கினார். அந்த வகையில் தனது வங்கி கணக்குக்கு மாற்றியும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்கியும் மோசடியாக ரூ.13 லட்சம் வரை பணத்தை எடுத்துள்ளார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்களை சரிபார்க்கும்போது மோசடி செய்யப்பட்ட விவரம் அறிந்து ஜேப்லி சரவணன் அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக சுகந்தி மீது பிரெஞ்சு குடியுரிமை பெற்ற ஜேப்லி சரவணன் பெரியகடை போலீசில் புகார் செய்தார்.

புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக சத்யா தலைமையிலான போலீசார் நம்பிக்கை மோசடி உள்ளிட்ட வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக இருந்த சுகந்தியை கைது செய்தனர். கொரோனா பரிசோதனைக்குப் பின் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Next Story