கும்மிடிப்பூண்டி அருகே, நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலைவீச்சு


கும்மிடிப்பூண்டி அருகே, நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டு - கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்மநபர்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 25 April 2021 4:51 PM IST (Updated: 25 April 2021 4:51 PM IST)
t-max-icont-min-icon

கும்மிடிப்பூண்டி அருகே நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து திருட்டில் ஈடுபட்ட மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கும்மிடிப்பூண்டி,

கும்மிடிப்பூண்டி அடுத்த கவரைப்பேட்டையில் நாகராஜ் என்பவருக்கு சொந்தமான வணிக வளாக கட்டிடம் உள்ளது. இங்கு கவரைப்பேட்டை தீனதயாளன் நகரை சேர்ந்த ராஜேந்திரகுமார் (வயது 37) என்பவர் பாத்திரக்கடை மற்றும் மளிகை கடை நடத்தி வருகிறார்.

நேற்று காலை வழக்கம் போல் அவர் கடையை திறக்க வந்தபோது, அவரது 2 கடைகளின் வெளிப்புறம் உள்ள 4 இரும்பு ஷெட்டர் பூட்டுக்கள் அனைத்தும் உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். நள்ளிரவில் கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்த கல்லா பெட்டிகளை உடைத்து அவற்றில் இருந்த மொத்தம் ரூ.11 ஆயிரத்தை அள்ளிச் சென்றிருப்பது தெரியவந்தது.

அதேபோல அருகே உள்ள ஈஸ்வரன் (43) என்பவருக்கு சொந்தமான மொத்த வியாபார மிட்டாய் கடையின் பூட்டை உடைத்தும் உள்ளே புகுந்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்து ரூ.2 ஆயிரத்தை திருடி சென்றது தெரியவந்தது.

கவரைப்பேட்டை பஜாரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 3 கடைகளின் பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கைவரிசை காண்பித்து இருப்பது அப்பகுதியில் உள்ள வியாபாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பாத்திரக்கடையில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள மர்ம ஆசாமிகளின் உருவத்தை வைத்து போலீசார் விசாரணையை முடுக்கி விட்டு உள்ளனர்.

இதுகுறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story