முககவசத்துடன் எளிமையாக நடந்த திருமணங்கள்


முககவசத்துடன் எளிமையாக நடந்த திருமணங்கள்
x
தினத்தந்தி 25 April 2021 6:51 PM IST (Updated: 25 April 2021 6:51 PM IST)
t-max-icont-min-icon

முககவசத்துடன் எளிமையாக திருமணங்கள் நடந்தன.

ராமநாதபுரம், 
கொரோனா 2-வது அலை பரவலை தடுக்கும் வகையில் முழுஊரடங்கு உத்தரவு காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் திருமணங்கள் எளிமையாக நடந்தன. கோவில் கும்பாபிசேக விழாக்கள் குறைந்தளவு பக்தர்களுடன் நடந்தது.
கட்டுப்பாடு
உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் தாக்குதல் 2-வது அலை இந்தியாவில் வேகமாக பரவிவருவது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு ஞாயிற்றுகிழமைகளில் முழுஊரடங்கு அறிவித்துள்ளது. இந்தநிலையில் நேற்று முகூர்த்த நாள் என்பதால் ஏற்கனவே திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்திருந்தனர். 
தற்போதைய நிலையை கருத்தில் கொண்டு அரசும், மாவட்ட நிர்வாகமும் அதிகம்பேர் ஒன்று கூடுவதை தவிர்க்கும் வகையில் விடுக்கப்பட்ட கோரிக்கையை ஏற்று திருமணங்கள் எளிய முறையில் நடைபெற்றன. ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற பல திருமணங்கள் அவரவர் குடும்பத்தினரை மட்டும் வைத்து நடத்தப்பட்டது. ஒருசில உறவினர்கள் வந்து கலந்து கொண்டு உடனடியாக திரும்பி சென்றனர். ஒருமணி நேரத்திற்குள் அனைத்து நிகழ்வுகளையும் முடித்து கொண்டனர்.
ஒத்துழைப்பு
 நூற்றுக்கணக்கானோர் திரளாக வந்து வாழ்த்தும் திருமணங்கள் கொரோனா அச்சம் காரணமாக ஒருசிலரை வைத்து அவரவர் வீட்டு பகுதியில் எளிமையாக நடத்தப்பட்டது. ஒருபுறம் வேதனை அளிப்பதாக இருந்தாலும் நோய் தாக்காமல் நீண்ட நாள் நோய்நொடியின்றி இருக்க இந்த சமூக இடைவெளி அவசியம் என்பதை உணர்ந்து அரசின் கோரிக்கைக்கு ஒத்துழைத்தனர்.
திருமணம், காது குத்து, வளைகாப்பு உள்ளிட்ட விழாக்களில் கலந்து கொண்டவர்கள் மணமக்கள் உள்ளிட்டோர் முககவசம் அணிந்து கொரோனா வைரஸ் பரவாமல் முன்எச்சரிக்கையுடன் இருந்தனர். ஒருபுறம் நிச்சயிக்கப்பட்ட சுபநிகழ்ச்சிகளை தடைபட்டு போய்விடக் கூடாது என்று அரசின் விதிகளுக்கு உட்பட்டு எளிய முறையில் வீடுகளில் நடத்தினர். 
மற்றொரு புறம் பொது ஊரடங்கு சமயத்தில் நடத்த வேண்டாம் என தங்களின் இல்ல நிகழ்ச்சிகளை தள்ளிப்போட்டு உள்ளனர். ராமநாதபுரம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று கோவில்களில் கும்பாபிஷேகம் விழா ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஏற்கனவே திட்டமிட்ட விழா என்பதால் அரசின் கட்டுப்பாடு விதிமுறைகளை பின்பற்றி அதிக பக்தர்கள் கூடாமல் பார்த்துக்கொண்டு எளிமையாக விழாக்கள் நடைபெற்றன.

Next Story