வெறிச்சோடிய அமணலிங்கேஸ்வரர் கோவில்
முழு ஊரடங்கு காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
தளி
முழு ஊரடங்கு காரணமாக திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
அமணலிங்கேஸ்வரர் கோவில்
உடுமலையை அடுத்த மேற்குதொடர்ச்சி மலை அடிவாரத்தில் திருமூர்த்திமலை உள்ளது. இங்குள்ள அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பிரம்மா சிவன் விஷ்ணு ஆகிய கடவுள்கள் ஒருசேர ஒரே குன்றில் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி விநாயகர்முருகன்சப்தகன்னிமார், நவகிரகங்களும் தனித்தனி சன்னதிகளில் எழுந்தருளி உள்ளனர்.
கோவில் அடிவாரத்தில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்க அருவி உள்ளது. கோவில் அடிவாரத்தில் இருந்து 900 மீட்டர் உயரத்தில் பஞ்சலிங்கங்களும் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. அருவிக்கு மேற்குத்தொடர்ச்சி மலைகளில் உற்பத்தியாகின்ற ஆறுகள் மற்றும் ஓடைகள் நீர்வரத்தை அளித்து வருகிறது. அதில் விழுகின்ற மூலிகை தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர். இதனால் வார விடுமுறை, அரசு மற்றும் பொது விடுமுறை நாட்கள் கோடை விடுமுறையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கும்.
வெறிச்சோடிய கோவில்
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா 2வது அலை அதிவேகமாக நாடு முழுவதும் பரவி வருகிறது. இந்த நோய் பரவலை தடுப்பதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கடந்த 20ந் தேதி சுற்றுலாத்தலங்கள் மூடப்பட்டது. இதன்காரணமாக பஞ்சலிங்க அருவியில் குளிப்பதற்கு வனத்துறையினர் தடை விதித்தனர். ஆனால் அமணலிங்கேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முழுஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் ஞாயிற்றுக்கிழமை பரபரப்பாக காணப்படும் அமராவதிஅணை முதலைப்பண்ணை மற்றும் அமணலிங்கேஸ்வரர் கோவில், நீச்சல்குளம், திருமூர்த்திஅணைப்பகுதி சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
பூஜைகள் நடைபெறும்
மேலும் தளி, அமராவதி பகுதியில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி இருந்தனர். கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் தெருக்கள் வெறிச்சோடி காணப்பட்டது. நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதால் மறு உத்தரவு வரும் வரை அமணலிங்கேஸ்வரர் கோவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் வழக்கம்போல் நடைபெறுகின்ற மூன்று கால பூஜை நடைபெறும் என்று கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story