முழு ஊரடங்கிலும் முடங்காத தூய்மை பணியாளர்களின் சேவை
ஊட்டி நகராட்சியில் முழு ஊரடங்கிலும் முடங்காத சேவையாக ஒரே நாளில் 17 டன் குப்பைகளை தூய்மை பணியாளர்கள் அகற்றினர்.
ஊட்டி,
ஊட்டி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளது. இங்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடு, வீடாக சென்று மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து தூய்மை பணியாளர்கள் சேகரித்து வருகிறார்கள். நகர் முழுவதும் சேகரமாகும் குப்பைகள் தீட்டுக்கல் குப்பை கிடங்கில் கொட்டப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று கொரோனாவை பரவலை தடுக்க முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதனால் மருந்தகங்கள், பால் விற்பனையகங்களை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. நேற்று முன்தினம் கடைகள் திறந்து இருந்ததால் ஊட்டி நகராட்சி மார்க்கெட்டில் பழ கழிவுகள், காய்கறி கழிவுகள், குப்பைகள் அதிகளவில் தேக்கம் அடைந்தன.
முழு ஊரடங்கு அமலில் இருந்தாலும் தூய்மை பணியாளர்கள் நேற்று காலையில் வழக்கம்போல் தங்களது சேவையை தொடர்ந்தனர். அவர்கள் மார்க்கெட்டில் கழிவுகள், குப்பைகளை அகற்றி வாகனங்களில் ஏற்றினர். மேலும் அங்கு சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
இதேபோல் ஊட்டி காந்தல், பிங்கர்போஸ்ட், லோயர் பஜார், சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் பொதுவெளியில் கொட்டப்பட்டு இருந்த குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தனர். அவர்கள் கையுறை அணிந்தும், முககவசம் அணிந்தும் பணியில் ஈடுபட்டனர். காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை தூய்மைப் பணியில் ஈடுபட்டார்கள். இதன் மூலம் நகர் குப்பை இல்லாமல் தூய்மையாக காட்சி அளித்தது.
ஊட்டி கமர்சியல் சாலையில் மழைநீர் வழிந்தோடும் இடத்தில் மண் படிந்திருந்தது. இதனை மண்வெட்டியால் அகற்றி தூய்மைப்படுத்தினர். ஊட்டி நகராட்சியில் வழக்கமாக தினமும் 30 டன் குப்பைகள் சேகரமாகும்.
முழு ஊரடங்கான நேற்று ஒரே நாளில் 17 டன் குப்பைகள் அகற்றப்பட்டது. பின்னர் இவை வாகனங்கள் மூலம் குப்பை கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டது. மார்க்கெட்டில் உள்ள கடைகளுக்கு கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.
Related Tags :
Next Story