தூத்துக்குடியில் 130 இடங்களில் வாகன சோதனை


தூத்துக்குடியில் 130 இடங்களில் வாகன சோதனை
x
தினத்தந்தி 25 April 2021 8:31 PM IST (Updated: 25 April 2021 8:31 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் 130 இடங்களில் வாகன சோதனை நடத்தினர்.

தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று முழு ஊரடங்கை முன்னிட்டு 130 இடங்களில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டதாக, போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் கூறினார்.
வாகன தணிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் ஊரடங்கை அமல்படுத்தும் பணியிலும், வாகன சோதனையிலும் ஈடுபட்டனர். இந்த பணிகளை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகிறார். அதன்படி தூத்துக்குடி எட்டயபுரம் ரோட்டில் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ் தலைமையில் வாகன தணிக்கை நடந்தது. அதனை போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பார்வையிட்டார். அப்போது, ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியவர்களுக்கு அறிவுரை வழங்கினார். பின்னர் கபசுர குடிநீர் வழங்கினார்.
பறிமுதல்
தொடர்ந்து அவர் பேசும் போது, கொரோனா வைரஸ் 2வது கட்டமாக தீவிரமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்தி உள்ளது. அதன்படி முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பொதுமக்கள் ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும். தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம், தேவையில்லாமல் வெளியே சுற்றுபவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். அத்தியாவசிய தேவைகளான ஆஸ்பத்திரி, மருந்தகம், மருத்துவ பணியாளர்கள், கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிக்கு செல்வோருக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
130 இடங்கள்
மேலும் தூத்துக்குடி நகரில் 30 இடங்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 130 இடங்களில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்கள் அனைவரும் முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், கைகளை கிருமிநாசினி மற்றும் சோப்பு போட்டு அடிக்கடி சுத்தம் செய்யவேண்டும். நாளை (அதாவது இன்று) முதல் உணவகங்களில் பார்சல் சேவை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. உணவகங்களில் அமர்ந்து சாப்பிட அனுமதியில்லை. திரையரங்குகள், பெரிய வணிக வளாகங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இதுபோன்று தமிழக அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை பொதுமக்கள் கடைபிடித்து மாவட்ட நிர்வாகத்துக்கும், மாவட்ட போலீசுக்கும் ஒத்துழைப்பு தரவேண்டும் என்று கூறினார்.
ஆய்வின் போது, தூத்துக்குடி வடபாகம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆர்தர் ஜஸ்டின், ராமலிங்கம், போக்குவரத்து பிரிவு சப்இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Next Story