ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்காலில் தண்ணீர் திறப்பு கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்
ஸ்ரீவைகுண்டம் வடகால், தென்காலில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:
ஸ்ரீவைகுண்டம் அணை வடகால், தென்காலில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.
முன்கார் சாகுபடி
தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி பாசனத்தில் மருதூர் அணைக்கட்டின் கீழ் உள்ள மேலக்கால் மற்றும் கீழக்கால் மூலம் 20 ஆயிரத்து 547 ஏக்கரும், ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் மூலம் 25 ஆயியத்து 560 ஏக்கரும் என மொத்தம் 46 ஆயிரத்து 107 ஏக்கர் பாசன நிலங்கள் உள்ளன. இந்த பகுதியில் வடகிழக்கு பருவமழை காலத்தில் அக்டோபர் 15 முதல் மார்ச் முடிய பிசான பருவம் என்றும், ஜூன் 15 முதல் செப்டம்பர் 15 வரை கார் பருவம் என்றும் விவசாயம் நடக்கிறது. இடையில் ஏப்ரல், மே மாதங்களில் முன்கார் சாகுபடி என்ற பருவ முறையும் பழக்கத்தில் உள்ளது. ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் பாசனத்தில் உள்ள 8 ஆயிரத்து 124 'ஏ' குருப் நஞ்செய் நிலங்கள் முன்கார் சாகுபடி உரிமை பெற்றவையாகும். இந்த நிலங்களுக்கு அணைகளில் உள்ள நீர் இருப்பை பொறுத்து முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படும். பெரும்பாலான ஆண்டுகளில் இந்த காலக்கட்டத்தில் அணைகளில் நீர் இருப்பு மிகவும் குறைவாகவே இருக்கும் என்பதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி கிடைப்பதில்லை.
அனுமதி
இந்த ஆண்டு அணைகளில் போதுமான தண்ணீர் உள்ளதால் முன்கார் சாகுபடிக்கு அனுமதி அளிக்க வேண்டும் என ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன்பேரில் ஸ்ரீவைகுண்டம் அணைக்கட்டு வடகால் மற்றும் தென்கால் பாசனத்தில் உள்ள 8 ஆயிரத்து 124 ஏக்கர் நிலங்களுக்கு முன்கார் சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டு உள்ளது. இதனால் கடந்த 23-ந் தேதி அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தண்ணீர் திறப்பு
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், முன் கார் சாகுபடிக்காக ஸ்ரீவைகுண்டம் அணையிலிருந்து வடகால் தென்காலில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.
இதனால் ஸ்ரீவைகுண்டம், ஏரல், தூத்துக்குடி தாலுகா விவசாயிகள் பயன் பெறுவார்கள். தொடர்ந்து 120 நாட்கள் தண்ணீர் விடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது’ என்று அவர் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story