தீயில் கருகி கல்லூரி மாணவி மர்ம சாவு


தீயில் கருகி கல்லூரி மாணவி மர்ம சாவு
x
தினத்தந்தி 25 April 2021 10:14 PM IST (Updated: 25 April 2021 10:14 PM IST)
t-max-icont-min-icon

கடலூர் முதுநகர் அருகே கல்லூரி மாணவி மர்மமான முறையில் தீயில் கருகி இறந்து கிடந்தார். இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர், 

கடலூர் முதுநகர் அருகே உள்ள மணக்குப்பம் நடுத்தெருவை சேர்ந்தவர் கல்யாணசுந்தரம் (வயது 49). தொழிலாளி. இவருக்கு தெய்வானை என்ற மனைவியும், ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். 

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கல்யாணசுந்தரம் தனது குடும்பத்தோடு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் தீயில் கருகும் வாடை வந்தது. இதனால் அவர் எழுந்து, வீடு முழுவதும் சென்று பார்த்தார். 

மர்ம சாவு

அப்போது வீட்டு பூஜை அறையில் அவரது 2-வது மகள் திலகவதி (18) தீயில் கருகிய நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் இறந்த திலகவதி உடலை பார்த்து கதறி அழுதார். 
பின்னர் இதுபற்றி கல்யாணசுந்தரம் கடலூர் முதுநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து இறந்த திலகவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து கல்யாணசுந்தரம் தனது மகள் சாவில் சந்தேகம் உள்ளதாக கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவி இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இறந்த திலகவதி கடலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கல்லூரி மாணவி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story