விழுப்புரம் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்


விழுப்புரம் மாவட்டத்தில் வெறிச்சோடிய சாலைகள்
x
தினத்தந்தி 25 April 2021 10:25 PM IST (Updated: 25 April 2021 10:25 PM IST)
t-max-icont-min-icon

ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

விழுப்புரம், 


தமிழகத்தில் தற்போது கட்டுக்கடங்காமல் பரவி வரும் கொரோனா பெருந்தொற்றை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அரசு அறிவித்துள்ளது. 

அந்த வகையில் முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை பெரிய வணிக நிறுவனங்கள் தொடங்கி சிறிய கடைகள் வரைக்கும் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன.

ஓட்டல்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் அம்மா உணவகங்கள் மட்டுமே திறந்திருந்தன. இதனால் பலர் அம்மா உணவகத்திற்கு சென்று உணவு வாங்கி சாப்பிட்டு பசியை போக்கினர். மேலும் இறைச்சி கடைகளும் அடைக்கப்பட்டு இருந்ததால்  அசைவ பிரியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  

வெறிச்சோடிய சாலைகள்

பொது போக்குவரத்தை பொறுத்தவரை முற்றிலும் நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் முக்கிய சாலைகள் அனைத்தும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

குறிப்பாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலை, சுங்கச்சாவடி மையங்கள் அனைத்தும் வாகன போக்குவரத்து ஏதும் இல்லாமல் இருந்தன.  அதே போல் ரெயில்சேவையானது நேற்று வழக்கம் போல் இருந்தது. இருப்பினும் விழுப்புரம் வழியாக சென்ற ரெயில்களில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மிககுறைவாக தான் இருந்தது. 

வழிபாட்டு தலங்கள்

மேலும் மாவட்டத்தில் முக்கிய வழிப்பாட்டு தலமான மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், மயிலம் முருகன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் நடை சாத்தப்பட்டு இருந்தன.  

இதில் மயிலம் முருகன் கோவில் மற்றும் அங்குள்ள திருமண மண்டபங்களில் திருமணம் நடத்த முன்கூட்டியே பதிவு செய்து இருந்தவர்களுக்கு மட்டும் திருமணம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது. 

ஒவ்வொரு திருமண நிகழ்ச்சியிலும் 20 பேருக்கு மட்டும் அனுமதி சீட்டு வழங்கப்பட்டு, திருமணம் நடத்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது. 
விழுப்புரத்தில் மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டனர்.

 இதில் ஊரடங்கை மீறி வெளியே சுற்றி திரிந்ததாக 100-க்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு அபராதம் விதித்தனர்.


Next Story