முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கையொட்டி அனைத்து கடைகளும் அடைப்பு சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 25 April 2021 11:59 PM IST (Updated: 25 April 2021 11:59 PM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கையொட்டி பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் மாவட்டத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

கரூர்
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதை கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ந் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. 
அந்த வகையில் முதல் முழு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமையான நேற்று அமலுக்கு வந்தது. ஏற்கனவே கொரோனா முதல் அலையை கட்டுப்படுத்த 7 மாதங்களுக்கு முன்பு தொடர் ஊரடங்கு அமலில் இருந்தது. அதன்படி 7 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் நேற்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.
சாலைகள் வெறிச்சோடின
முழு ஊரடங்கு உத்தரவினால் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள், ஷேர் ஆட்டோக்கள், கனரக வாகனங்கள் என அனைத்து வாகனங்களும் ஓடவில்லை. இதனால் எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடங்கள் கரூர் - கோவைரோடு, ஜவகர்பஜார், செங்குந்தபுரம், வெங்கமேடு, தாந்தோணிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்கள் மற்றும் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. 
கடைகள் செயல்படவில்லை
அரசு பஸ்கள் கரூர், அரவக்குறிச்சி, குளித்தலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு போக்குவரத்து கழக பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தனியார் பஸ்கள், லாரிகள், ஆட்டோக்கள் மற்றும் கனரக வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
முழு ஊரடங்கால் டீக்கடைகள், இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள், மளிகை கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள், மற்றும் டாஸ்மாக் கடைகள் செயல்படவில்லை. இதனால் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. 
பெட்ரோல்-டீசல் விற்பனை
கரூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் சேவை, பெட்ரோல்-டீசல் விற்பனை நிலையங்கள், பால் விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டிருந்தன. விவசாயிகளின் விளை பொருட்கள் எடுத்துச் செல்லும் வாகனங்கள், எரிபொருளை எடுத்துச்செல்லும் வாகனங்கள் ஆகியவை முழு ஊரடங்கின் போது இயங்கின. 
போலீசார் அபராதம்
வெளியூரில் இருந்து வந்து தங்கி பணிபுரியும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு கரூர் பஸ் நிலையம் அருகே உள்ள ஓட்டலில் காலை மட்டும் பார்சல் வழங்கப்பட்டது. 
கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஊரடங்கை மீறி சாலையில் இரு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிந்தவர்களை பிடித்து போலீசார் எச்சரித்து விடுத்தும், சில இடங்களில் முககவசம் அணியாமல் சுற்றித்திரிந்தவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
கடைப்பிடிப்பு
குளித்தலை, வெள்ளியணை, அரவக்குறிச்சி, நொய்யல், க.பரமத்தி, நச்சலூர், லாலாபேட்டை, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, தோகைமலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளிலும் நேற்று அனைத்து கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்கள், மருத்துவமனைகள் வழக்கம்போல் இயங்கின. கரூர் மாவட்டத்தை பொறுத்தவரை முழு ஊரடங்கு முழுமையாக கடைப்பிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story