மறுசுழற்சி முறையில் ஆக்சிஜன் பயன்படுத்தும் மருத்துவ உபகரணம்


மருத்துவ உபகரணம்
x
மருத்துவ உபகரணம்
தினத்தந்தி 26 April 2021 1:19 AM IST (Updated: 26 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

மறுசுழற்சி முறையில் ஆக்சிஜன் பயன்படுத்தும் மருத்துவ உபகரணம்

கோவை

கொரோனா நோய் தொற்று பரவல் இந்தியாவில் வேகமாக அதிகரித்து வரும் காரணத்தால் ஆக்சிஜன் தேவை கணிசமாக அதிகரித்துள்ளது. 

இந்த நெருக்கடியான சூழ்நிலையை எதிர்கொள்ள உதவும் வகையில், மறுசுழற்சி முறையில் ஆக்சிஜன் பயன்படுத்தும் 'பைபேப்' மருத்துவ உபகரணம் கோவையில் தயாரிக்கப்படுகிறது. இதுகுறித்து இதனை தயாரிக்கும் ரவி கணேஷ் கூறியதாவது:-

கோவையை பூர்வீகமாக கொண்ட நான் மும்பை ஐ.ஐ.டி. நிறுவனத்தில் பயோமெடிக்கல் என்ஜினீயரிங் படித்தேன். கோவையில் மருத்துவ உபகரணம் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறேன். மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமிடம் விருது பெற்றுள்ளோம்.

 நோய்த்தொற்று பரவல் முதல் அலை தாக்கத்தை ஏற்படுத்திய முதலே சமுதாய மக்களுக்கு பயன்படும் வகையில் ஏதேனும் மருத்துவ உபகரணத்தை தயாரிக்க வேண்டும் என்ற முனைப்போடு செயல்பட்டு வந்தோம்.

அதன் பயனாக தற்பொழுது மறுசுழற்சி முறையில் ஆக்சிஜனை பயன்படுத்தும் 'பைபேப்' உபகரணத்தை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம். 'ரி பிரீத்தர்' என்று சொல்லக்கூடிய இந்த தொழில்நுட்பம் ஸ்கூபா டைவிங், அனஸ்தீசியா வென்டிலேட்டர் மற்றும் சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் உள்ளிட்ட இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. 

ஆனால் இன்று வரை இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்று பரவலுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் இந்த தொழில்நுட்பம் பயன்படுத்தப்படவில்லை. இதை பயன்படுத்துவதால் மிக அதிக அளவில் ஆக்சிஜன் சேமிக்க முடியும்.

தற்போது ஒரு நோயாளிக்கு அளிக்கப்படும் ஆக்சிஜன் அளவில் 30 நோயாளிகளுக்கு இந்த கருவியை பயன்படுத்துவதன் மூலம் ஆக்சிஜன் வழங்க முடியும். இதுவே இந்த மருத்துவ உபகரணத்தின் தனிச்சிறப்பாகும். எங்களது உபகரணம் மருத்துவ ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டது. 

எனவே தற்போது உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு அரசு விரும்பினால் நாங்கள் மொத்தமாக உபகரணங்களை தயாரித்து வழங்க தயாராக உள்ளோம். இன்றுவரை 20 உபகரணங்களை விற்பனை செய்துள்ளோம். மறுசுழற்சி முறையில் ஆக்சிஜன் பயன்படுத்துவதால் அதிக சேமிப்பு கிடைக்கிறது. 

முதலில் எங்கள் உபகரணம் குறித்த விழிப்புணர்வு அதிகம் இன்னும் ஏற்படவில்லை. தற்போது இந்த ஆர்டர்களுக்கான விசாரணைகள் சமீப நாட்களாக அதிகரித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story