கோவில்களில் நடை அடைப்பு மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை


கோவில்களில் நடை அடைப்பு மறு உத்தரவு வரும் வரை பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதியில்லை
x
தினத்தந்தி 26 April 2021 1:45 AM IST (Updated: 26 April 2021 1:45 AM IST)
t-max-icont-min-icon

கோவில்களில் நடை அடைக்கப்பட்டன.

சமயபுரம், 
கொரோனா தொற்று பரவலை தடுக்க நேற்று முழுஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் பெரும்பாலான இடங்களில் கோவில்களின் நடை அடைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் நேற்று ஊரடங்கு காரணமாக பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கோவில் நடை சாத்தப்பட்டிருந்தது. அம்மனுக்கு நடைபெறும் அன்றாட பூஜைகள் மட்டும் வழக்கம் போல் நடைபெற்றன. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில், திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர்-அகிலாண்டேஸ்வரி கோவில், பரிகார ஸ்தலமாக விளங்கும் திருப்பைஞ்சீலி நீலிவனநாதர்கோவில், லால்குடி சப்தரிஷீஸ்வரர்கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நடைசாத்தப்பட்டிருந்தன. மேலும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் மறு உத்தரவு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதியில்லை என்று கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோல் கிறிஸ்தவ தேவாலயங்கள், மசூதிகள், பள்ளிவாசல்கள் உள்ளிட்ட மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு இருந்தன.

Next Story