திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு: கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்; தடையின்றி நடந்த விவசாய பணிகள்
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின. அதேநேரம் விவசாய பணிகள் தடையின்றி நடந்தன.
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு:
கடைகள் அடைப்பு; வெறிச்சோடிய சாலைகள்
தடையின்றி நடந்த விவசாய பணிகள்
திருச்சி, ஏப்.26-
திருச்சி மாவட்டத்தில் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடின. அதேநேரம் விவசாய பணிகள் தடையின்றி நடந்தன.
தா.பேட்டை, முசிறி
கொரோனா தொற்று பரவலை தடுக்க நேற்று ஒரு நாள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் திருச்சி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடின. தா.பேட்டை பகுதியில் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், பெட்டிகடைகள், டீ கடைகள், இறைச்சி கடைகள் உள்பட பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தது.
இதனால் தா.பேட்டை கடைவீதி, பஸ் நிலையம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இதுபோல் முசிறி கைகாட்டி, திருச்சி சாலை, நகர பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், துறையூர் சாலை, கடைவீதிஉள்ளிட்ட முக்கிய பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் போலீசார் சோதனையின் போது ஊரடங்கை மீறி வாகனங்களை ஓட்டி வந்தவர்களை நிறுத்தி அபராதம் விதித்து அறிவுரை கூறி எச்சரித்து அனுப்பி வைத்தனர். முசிறியில் காவிரி பெரியார் பாலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசார் தொடர்ந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
சமயபுரம்
இதுபோல், சமயபுரம் மற்றும் மண்ணச்சநல்லூர் பகுதிகளில் உள்ள கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் நேற்று முன்தினம் இரவே அடைக்கப்பட்டன. எப்போதும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரத்தில் உள்ள சுங்கச்சாவடி நேற்று வாகனங்கள் ஓடாததால் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழியும் சமயபுரம் நால்ரோடு, கடைவீதி, தேரடிவீதி உள்ளிட்ட பகுதிகளில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடந்தன.
லால்குடி, உப்பிலியபுரம்
லால்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று திறக்கப்படவில்லை. மருந்தகம் மட்டும் திறந்து இருந்தன. ஊரடங்கு உத்தரவை மீறி இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வலம் வந்தவர்களை லால்குடி ரவுண்டானா பகுதியில் போக்குவரத்து போலீசார் மறித்து அபராதம் விதித்தனர். இதுபோல் முழு ஊரடங்கால் உப்பிலியபுரம் பகுதி களையிழந்து காணப்பட்டது. வழக்கம் போல் விவசாய தொழிலாளர்கள் வழக்கம் போல் வயல்களுக்கு சென்று விவசாய பணியில் ஈடுபட்டனர்.
கொள்ளிடம் டோல்கேட்
கொள்ளிடம் நம்பர் 1 டோல்கேட் பகுதியில் அத்தியாவசியம் இல்லாத அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. இதனால் கடைவீதி பகுதிகள் வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையம், மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கின. மேலும் அதிக போக்குவரத்து நிறைந்த பிரதான சாலைகளை இணைக்கும் நம்பர் 1 டோல்கேட் ரவுண்டானா பகுதி மற்றும் கொள்ளிடம் ஆற்றுப் பாலம் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. உத்தமர்கோவில் வழிபாட்டுத் தலத்தில் ஏற்கனவே திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்த அனைத்து திருமணங்களும் அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டு திருமணங்கள் நடைபெற்றது.
துறையூர்
துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. நேற்று முகூர்த்த நாள் என்பதால் நகரின் பெரும்பாலான திருமண மண்டபங்கள் குறைந்த அளவிலான உறவினர்கள் முன்னிலையில் சமூக பாதுகாப்புடன் முக கவசம் அணிந்து பாதுகாப்புடன் நடைபெற்றன.
துறையூர் ஆத்தூர் சாலை, எரகுடி சாலை, கோவிந்தாபுரம், சித்திரப்பட்டி பகுதிகளில் நேற்று காலையில் இறைச்சி கடைகள் வழக்கம் போல் செயல்பட்டன. இதனால் அந்தந்த பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தும், அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்று சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினார்கள்.
வாரச்சந்தை ரத்து
இதுபோல் தொட்டியம், காட்டுப்புத்தூர், மணப்பாறை, துவரங்குறிச்சி, திருவெறும்பூர், கல்லக்குடி, சோமரசம்பேட்டை, புள்ளம்பாடி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அடைக்கப்பட்டு இருந்தன. புள்ளம்பாடி, கல்லக்குடி பேரூராட்சி, புள்ளம்பாடி ஒன்றிய பகுதிகளில் சிமெண்டு ஆலைகள், கரும்பு ஆலை, சுண்ணாம்புக்கல் சுரங்கங்கள் ஊரடங்கு காரணமாக செயல்படவில்லை. நேற்று நடைபெற இருந்த வாரச்சந்தையும், கோவில்களில் நடைபெற இருந்த திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன.
Related Tags :
Next Story