காதல் திருமணம் செய்ததில் முன்விரோதம்: லால்குடி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை மைத்துனர் உள்பட 3 பேருக்கு போலீசார் வலைவீச்சு
காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் லால்குடி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
லால்குடி,
காதல் திருமணம் செய்ததில் ஏற்பட்ட முன்விரோதத்தில் லால்குடி அருகே என்ஜினீயர் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மைத்துனர் உள்பட 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
என்ஜினீயர்
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திருமங்கலம் மேலத்தெருவை சேர்ந்த செல்வராஜின் மகன் கிருபன்ராஜ்(வயது 27). சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் சேப்டி என்ஜினீயராக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ராபின்ஷாமேரி(26). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
அதே பகுதியை சேர்ந்த சித்தார்த்தின் மகன் கவியரசனும், கிருபன்ராஜும் நெருங்கிய நண்பர்கள். கிருபன்ராஜின் தங்கை கிரிஜாவை கவியரசன் காதலித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த ஒரு மாதத்துக்கு முன் கிரிஜாவுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்ய பெற்றோர் நிச்சயம் செய்து இருந்தனர்.
காதல் திருமணம்
ஆனால் திருமணத்துக்கு முன் கிரிஜா, கவியரசனுடன் வீட்டை விட்டு வெளியேறி, இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இது கிருபன்ராஜுக்கு பிடிக்காததால், அவருக்கும், கவியரசனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.
இந்தநிலையில் சென்னையில் இருந்து ஊருக்கு வந்திருந்த கிருபன்ராஜ், நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் கவியரசன் வீட்டின் வழியாக சென்றுள்ளார். அங்கு அவரை கவியரசனும், அவருடைய 2 சகோதரர்களும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குத்திக்கொலை
அப்போது, தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கிருபன்ராஜை, கவியரசன் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக லால்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த லால்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் கிருபன்ராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவியரசன் மற்றும் அவருடைய 2 சகோதரர்களை தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story