முழு ஊரடங்கு அமல்; தென்காசி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின


முழு ஊரடங்கு அமல்; தென்காசி மாவட்டத்தில் கடைகள் அடைப்பு- சாலைகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 26 April 2021 2:30 AM IST (Updated: 26 April 2021 2:30 AM IST)
t-max-icont-min-icon

முழு ஊரடங்கு காரணமாக நேற்று தென்காசி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. சாலைகள் வெறிச்சோடியது.

தென்காசி, ஏப்.26-
முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் தென்காசி மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. 

முழு ஊரடங்கு அமல்

கொரோனா பரவல் காரணமாக தமிழகம் முழுவதும் நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமான தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகரம் முழுவதும் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. வாகன போக்குவரத்து இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. மருந்துகடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. போக்குவரத்து இல்லாததால் செங்கோட்டை பஸ்நிலையம், முக்கிய சாலைகள், தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. 

தமிழக -கேரள எல்லை பகுதியில் செங்கோட்டை அருகே உள்ள புளியரை வாகன சோதனை சாவடியும் மூடப்பட்டு இருந்தது. கொரோனா தடுப்பு சோதனை சாவடி மருத்துவ முகாம் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அங்கு சுகாதார ஊழியர்கள் முழுமையாக பணியாற்றி வருகிறார்கள்.

பாவூர்சத்திரம்-கடையநல்லூர்

பாவூர்சத்திரம் பஸ் நிலையம் மற்றும் நெல்லை, தென்காசி சாலையில் உள்ள அனைத்து கடைகள், காமராஜர் தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள 150 கடைகள் உள்பட 500-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. அத்துடன் மினி பஸ், ஆட்டோ, கார், வேன் போன்ற எந்தவித வாகனங்களும் இயங்கவில்லை. பாவூர்சத்திரத்தில் உள்ள மர ஆலைகள், அரிசி ஆலைகள் அனைத்தும் இயங்கவில்லை. இதனால் பாவூர்சத்திரம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. பாவூர்சத்திரத்தில் நான்கு சாலைகள் இணைக்கும் இடத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர்.
கடையநல்லூரில் தினசரி மார்க்கெட், மீன் கடை, கறிக்கடை, சினிமா தியேட்டர்கள், வழிபாட்டு தலங்கள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தது. வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின. வாசுதேவநல்லூர் நகர பஞ்சாயத்து பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தது. மார்க்கெட் பஜார், கீழபஜார், புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் பகுதியில் உள்ள 100-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டு, பொது மக்கள் நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

Next Story