சேலம் மாவட்டத்தில் முழு ஊரடங்கு: வீடுகளில் முடங்கிய மக்கள் வெறிச்சோடிய சாலைகள்
வீடுகளில் முடங்கிய மக்கள் வெறிச்சோடிய சாலைகள்
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று முழு ஊரடங்கையொட்டி மக்கள் வீடுகளில் முடங்கினர். வீதிகள் மற்றும் சாலைகள் வெறிச்சோடின. பூலாம்பட்டியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
முழு ஊரடங்கு
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசு எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமையில் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மேட்டூரில் நேற்று அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மேட்டூர் நகரின் முக்கிய பகுதியான ஸ்கொயர் மார்க்கெட் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருந்தன.
பஸ் நிலையம் பஸ்கள் இன்றி வெறிச்சோடியது மேட்டூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையில் மேட்டூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு மற்றும் போலீசார் மேட்டூர் நகர் பகுதியில் முழுமையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தேவையின்றி சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்து அனுப்பினர்.
மேலும் மேட்டூர் நகராட்சி சார்பில் கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
எடப்பாடி
இதேபோல் முழு ஊரடங்கு காரணமாக, எடப்பாடி பஸ் நிலையம் நேற்று வெறிச்சோடி காணப்பட்டது. பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. பஸ் நிலையம் முழுவதும் போலீசார் தடுப்புகளை ஏற்படுத்தி தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். தீவிர சோதனைக்கு பிறகே மோட்டார் சைக்கிள், கார்களை அனுப்பினர்.
மேலும் தேவையில்லாமல் வந்த வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். இதேபோல் கொங்கணாபுரம் ரவுண்டானா முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பூலாம்பட்டி முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. விசைப்படகு போக்குவரத்தும் நிறுத்தப்பட்டது. இதனால் பூலாம்பட்டி பஸ் நிலையம், விசைப்படகு இல்லம் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆத்தூர், இளம்பிள்ளை
நேற்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்ததால் இடங்கணசாலை, இளம்பிள்ளை ஆகிய பகுதிகளில் உள்ள வணிக நிறுவனங்கள், ஜவுளி கடைகள், விசைத்தறி கூடங்கள் உள்பட அனைத்து கடைகளும் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் இடங்கணசாலை பஸ் நிலையம் மற்றும் சாலைகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியது.
இதேபோல் ஆத்தூர், நரசிங்கபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. மேலும் ஆட்கள் நடமாட்டமின்றி ஆத்தூர் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது. பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நிலையில், அனைத்து பகுதிகளிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
இதுதவிர ஏற்காடு, மேச்சேரி, சங்ககிரி, ஆட்டையாம்பட்டி, கெங்கவல்லி உள்பட மாவட்டம் முழுவதும் முழு ஊரடங்கால் மக்கள் வீடுகளில் முடங்கினர். இதனால் வீதிகள், சாலைகள் வெறிச்சோடி காட்சி அளித்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story