முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடிய ரோடுகள்- கடைகள் அடைக்கப்பட்டன
முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டன.
ஈரோடு
முழு ஊரடங்கால் வாகன போக்குவரத்து இன்றி ரோடுகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டன.
முழு ஊரடங்கு
கொரோனா பரவலை தடுக்க ஞாயிற்றுக்கிழமை தோறும் தமிழக அரசு முழு ஊரடங்கை அறிவித்துள்ளது. அதன்படி நேற்று ஞாயிற்றுக்கிழமையையொட்டி தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. பூ மார்க்கெட், தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவையும் மூடப்பட்டிருந்தன. அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களை தவிர எந்த வாகனமும் ஓடவில்லை. கடைவீதி, பஸ் நிலையம் வெறிச்சோடி கிடந்தன. சத்தியமங்கலம் பவானி ஆற்றுப் பாலத்தில் போலீசார் குவிக்கப்பட்டு சோதனையில் ஈடுபட்டார்கள்.
பண்ணாரி சோதனை சாவடியில் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் விடப்பட்டது. தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்கும், அங்கிருந்து தமிழ்நாட்டுக்கும் வரும் கார்களில் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்பட்டது. இல்லை என்றால் திருப்பி அனுப்பப்பட்டது. பண்ணாரி அம்மன் கோவிலுக்கு பக்தர்கள் யாரும் வராததால் வளாகம் முழுவதும் வெறிச்சோடி கிடந்தது. ஆனால் கோவிலில் வழக்கம்போல் 4 கால பூஜைகள் நடைபெற்றது.
கோபி
இதேபோல் கோபியில் தினசரி மார்க்கெட் அடைக்கப்பட்டிருந்தது. கோபி-ஈரோடு-சத்தி மெயின் ரோடு ஆகிய ரோடுகளில் போக்குவரத்து எதுவுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் கடைவீதி, ஈரோடு-சத்தி மெயின் ரோடு, நல்லகவுண்டன்பாளையம், கரட்டடிபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கோபி பஸ் நிலையம் வெறிச்சோடி காணப்பட்டது.
கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேலு தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கோபி பகுதியில் 230 போலீசார் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். தடையை மீறி வாகனங்களில் வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி அவர்களிடம் கொரோனா பரவல் குறித்து எச்சரித்து அனுப்பினர்.
பவானி
பவானியில் நேற்று காலை 6 மணி முதல் ஓட்டல்கள், மளிகை கடைகள், மார்க்கெட்டுகள், இறைச்சிக் கடைகள், மீன் கடைகள், டீக்கடைகள், வணிக வளாகங்கள், துணிக்கடைகள், அங்காடிகள் என அனைத்தும் அடைக்கப்பட்டன. மேலும் பஸ் நிலையத்திலும் எந்த கடைகளும் திறக்கப்படாமல் அடைக்கப்பட்டு வெறிச்சோடி காணப்பட்டது. ஆட்டோ, பஸ்கள் இயங்கவில்லை. அதிகாலையில் பால் விற்பனை நடைபெற்றது. ஆஸ்பத்திரிகள், மருந்து கடைகள் மதியம் வரை திறக்கப்பட்டது.
பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வழக்கம்போல் பவானி சங்கமேஸ்வரர் கோவில், செல்லாண்டியம்மன் கோவில் போன்ற கோவில்களில் பூஜை நடைபெற்றது. ஊரடங்கால் பக்தர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. ஆனால் ஞாயிற்றுக்கிழமை தோறும் கிறிஸ்தவ தேவாலயங்களில் நடைபெறும் ஆராதனைகள் ரத்து செய்யப்பட்டது.
பெருந்துறை
பெருந்துறை நகரில் உள்ள பவானி ரோடு அண்ணா சிலை சந்திப்பு, தினசரி மார்க்கெட் சந்திப்பு, நால்ரோடு சந்திப்பு, அரசு மருத்துவமனை சந்திப்பு, ஈரோடு ரோடு காவல் நிலைய சந்திப்பு ஆகிய பகுதிகள் நேற்று வெறிச்சோடி காணப்பட்டன. முக்கிய சாலை சந்திப்புகளில் போக்குவரத்து மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
சாலைகளில், ஆம்புலன்ஸ் வேன், சரக்கு லாரிகள் மற்றும் ஓரிரு பால் வாகனங்களைத் தவிர வேறு எந்தவொரு வாகனமும் ஓடவில்லை. பெருந்துறை பஸ் நிலையம், தினசரி மார்க்கெட் ஆகிய பகுதிகள் ஆள் நடமாட்டமின்றி அமைதியாக காட்சியளித்தன.
சென்னிமலை
சென்னிமலையில் மருந்து கடைகள் மற்றும் பால் கடைகளை தவிர அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது. காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, 4 ராஜ வீதிகள் மற்றும் பி.ஆர்.எஸ்.ரோட்டில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. கைத்தறி மற்றும் விசைத்தறி கூடங்கள் உள்ளிட்ட அனைத்து தொழில் நிறுவனங்களும் செயல்படவில்லை. சென்னிமலை அருகே உள்ள ஈங்கூர், வெள்ளோடு மற்றும் கிராமப்புறங்களில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டிருந்தது.
சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ரோந்து பணியில் ஈடுபட்டார். மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் சென்னிமலை பகுதியில் திடீர் ஆய்வு செய்தார்.
அந்தியூர்
அந்தியூர் பகுதியில் உள்ள அனைத்து ரோடுகளும் வாகனங்கள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. மருந்துக்கடைகள், மருத்துவமனை பெட்ரோல் பங்க், பால் வினியோகம் செய்யக்கூடிய பால் பூத் ஆகியவை இயங்கின. மற்ற அனைத்து வணிக வளாகங்கள், இறைச்சி கடை, நகைக்கடை, மளிகை கடைகள், டீக்கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதையொட்டி அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
மேலும் கர்நாடக மாநிலத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய வாகனங்கள் அனைத்தும் பர்கூர் அருகே உள்ள தட்டக்கரை சோதனைச்சாவடியில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டது. அதேபோல் ஆப்பக்கூடல், அத்தாணி போன்ற பகுதிகளில் உள்ள அனைத்து ரோடுகளும் வாகனங்கள் மற்றும் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடின.
புஞ்சைபுளியம்பட்டி
புஞ்சைபுளியம்பட்டி, பனையம் பள்ளி, புங்கம்பள்ளி, காவிலிபாளையம் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டடு மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் வெறிச்சோடி கிடந்தன. மருந்தகம், அம்மா உணவகம், பால் விற்பனை நிலையங்கள் ஆகியவை வழக்கம் போல் இயங்கின.
தாளவாடி
தாளவாடியில் பஸ் நிலையம், தலமலை சாலை, ஓசூர் சாலை என அனைத்து இடங்களும் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், தேவையின்றி வெளியில் வருவோரை எச்சரித்து திருப்பி அனுப்பினர். மருந்தகங்ககளும், பாலகங்களும் திறந்திருந்தன.
கொடுமுடி
கொடுமுடி புதிய பஸ் நிலையம், கரூர் - ஈரோடு பைபாஸ் சாலை, கடைவீதி, மகுடேஸ்வரர் வீரநாராயணப்பெருமாள் கோவில் பகுதிகள், கடைத்தெரு ஆகிய இடங்களில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. இறைச்சி கடைகள் மூடப்பட்டு கிடந்தன. கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் ஆங்காங்கே போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். சாலைப்புதூர் கரூர்- ஈரோடு பைபாஸ் சாலை ஆகிய ரோடுகள் போக்குவரத்து இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.
ஊஞ்சலூர்
ஊஞ்சலூர் மற்றும் அருகே உள்ள தாமரைப்பாளையம், கொளாநல்லி, நடுப்பாளையம், கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர் ஆகிய முக்கியமான இடங்களில் உள்ள வணிகம் சம்பந்தப்பட்ட, மளிகை கடைகள், ஓட்டல்கள், பெட்டி கடைகள், டீ கடைகள் ஆகியவை அனைத்தும் மூடப்பட்டு இருந்தன. அனைத்துப் பகுதிகளிலும் நெடுஞ்சாலை போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டு இருந்தனர்.
மேலும் காலையில் 6 மணி முதல் 7 மணி வரை பால் கூட்டுறவு சங்கங்கள் மட்டும் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் பால் கொள்முதல் செய்யப்பட்டது. ஊஞ்சலூர் நாகேஸ்வரர் கோவில், வெங்கம்பூர் அக்கரைப்பட்டி முத்துசாமி கோவில், கொளாநல்லி பாம்பலங்கார சாமி கோவில், ஸ்ரீ பூமி நீளா சமேத கல்யாண வரதராஜ பெருமாள் கோவில் ஆகியவை பூட்டப்பட்டு இருந்தன.
சிவகிரி-கவுந்தப்பாடி
சிவகிரியில் தினசரி மார்க்கெட் இயங்கவில்லை. சிவகிரி புதிய பஸ் நிலையம், தியாகி திருப்பூர் குமரன் சிலை, தியாகி தீரன் சின்னமலை சிலை பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இன்றி ரோடுகள் வெறிச்சோடி காணப்பட்டது. ஈரோடு மாவட்ட எல்லையான ஒத்தபனை சோதனைச்சாவடியில் சிவகிரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
அதேபோல் சிவகிரி அருகே உள்ள கந்தசாமி பாளையம், அஞ்சூர் ஊராட்சி பகுதிகளில் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் முழு ஊரடங்கை கடைபிடித்தனர். கவுந்தப்பாடி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ரோடுகள் போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
டி.என்.பாளையம்
டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான வாணிப்புத்தூர், ஏழூர், கொங்கர்பாளையம், டி.ஜி.புதூர், கள்ளிப்பட்டி, பங்களாபுதூர் ஆகிய பகுதிகளில் நேற்று அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன.
Related Tags :
Next Story