வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது மோதுவதுபோல் காரில் வேகமாக வந்த வாலிபர்
வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார் மீது மோதுவதுபோல் காரில் வேகமாக வந்த வாலிபர், தனக்கு குடும்ப பிரச்சினை உள்ளதால் காரை வைத்து கொண்டு ரூ.1லட்சம் தரும்படி கேட்டு போலீசாரிடம் வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பூந்தமல்லி,
முழுஊரடங்கு காரணமாக நேற்று காலை பூந்தமல்லி, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் தடுப்புகளை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். போரூர் நான்கு சாலை சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசார், முகலிவாக்கத்தில் இருந்து வேகமாக வந்த காரை நிறுத்தும்படி கூறினர்.
ஆனால் காரை ஓட்டி வந்த வாலிபர், போலீசார் மீது மோதுவதுபோல் வந்து, காரை நிறுத்தாமல் வேகமாக சென்றுவிட்டார். உடனடியாக போலீசார், இதுபற்றி அருகில் போரூரில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
போலீசாரிடம் வாக்குவாதம்
அதன்படி போரூரில் நின்ற போலீசார், அந்த காரை மடக்கி பிடித்தனர். காருக்குள் இருந்த வாலிபரை வெளியே அழைத்து விசாரணை செய்தனர். அப்போது அவர், குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது.
தனது பெயர் மைக்கேல் எனவும், தனது குடும்ப பிரச்சினை காரணமாக இதுபோல் வேகமாக வந்ததாகவும் கூறிய அவர், தன் மீது வழக்கு போட்டுக்கொள்ளுங்கள், காரையும் வைத்துக்கொள்ளுங்கள். ஆனால் தனக்கு அவசரமாக ரூ.1 லட்சம் தேவைப்படுகிறது. அதை தாருங்கள் என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அவருக்கு போலீசார் முக கவசம் கொடுத்து அணிய செய்தனர். அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. காரை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story