கோவில்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை


கோவில்பட்டியில் பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகை
x
தினத்தந்தி 26 April 2021 8:00 PM IST (Updated: 26 April 2021 8:00 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
குமரிகுளம் கிராமத்தில் பணம் கட்டினால் தான் தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை தரப்படும் என கட்டுப்பாடு விதிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெண்கள் முற்றுகை
கோவில்பட்டி பஞ்சாயத்து யூனியன் அலுவலகத்துக்கு நேற்று காலையில் டி. சண்முகபுரம் பஞ்சாயத்து குமரிகுளம் பகுதி பெண்கள் வார்டு உறுப்பினர் ஸ்ரீதேவி தலைமையில் வந்தனர். அவர்கள் திடீரென்று பஞ்சாய்த்து யூனியன் அலுவலகத்தை முற்றுகை போராட்டம் நடத்தினார்கள். 
அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அவர்கள் பஞ்சாயத்து யூனியன் ஆணையாளர் குமரனிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 
கட்டுப்பாடு விதிப்பதா?
அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
குமரி குளத்தில் 90 குடும்பங்கள் வசித்து வருவதாகவும், பஞ்சாயத்து தலைவர் ஜல ஜீவன் மிஷன் திட்டத்தில் வீடுகளுக்கு தண்ணீர் இணைப்பு பெற ரூ.1300 கட்டினால் தான், மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு திட்டத்தில், வேலை கிடைக்கும் என்று கூறுகிறார். நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறோம். நூறு நாள் வேலை திட்டத்தில் எங்களுக்கு வேலை கொடுக்க கட்டுப்பாடு விதிக்க கூடாது’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.
ஆணையாளர் பேச்சுவார்த்தை
அந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆணையாளர், போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் முற்றுகையை கைவிட்டு பெண்கள் கலைந்து சென்றனர்.

Next Story