கோவில்பட்டியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


கோவில்பட்டியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 April 2021 8:08 PM IST (Updated: 26 April 2021 8:08 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவில்பட்டி:
அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடைகளை திறந்து தொழில் நடத்த அனுமதிக்க கோரி நேற்று கோவில்பட்டி நகரசபை அலுவலகம் முன்பு முடிதிருத்தும் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடு விதிகளில் சலூன் கடைகள் நேற்று முதல் அடைக்கப்பட வேண்டும் என்று அறிவிப்பு வந்திருக்கிறது. இதை யொட்டி கோவில்பட்டி நகரில் உள்ள 150 சலூன் கடைகள் அடைக்கப்பட்டன. 
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்கக் கோரியும், வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்து தொழில் நடத்த அனுமதி அளிக்க வலியுறுத்தியும் நேற்று கோவில்பட்டி நகர சபை அலுவலகம் முன்பு மருத்துவர்், முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்கத் தலைவர் குருசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. 
ஆர்ப்பாட்டத்தில் சங்க மாநில துணைத்தலைவர் பாலகிருஷ்ணன், செயலாளர் மாரிமுத்து, பொருளாளர் கருமாரி ஈஸ்வரன் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்த திரளாக  கலந்து கொண்டனர். 
கோரிக்கை
பின்னர் நகர சபை ஆணையாளர் ராஜாராமிடம் சங்கத் தலைவர் தலைமையில் நிர்வாகிகள் மனு கோரிக்கை மனு கொடுத்தனர்.
அந்த மனுவில்," கடந்த ஆண்டு கொரோனா முதல்கட்ட பரவல் ஊரடங்கு காரணமாக சலூன் கடைகள் ஆறுமாதங்களாக அடைக்கப்பட்டதால் முடிதிருத்தும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்து, பசி பட்டினியோடு மிகவும் சிரமப்பட்டனர். கடன் தொல்லைகளால் முடிதிருத்தும் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட நிகழ்வுகளும் நடந்தது. நிவாரண உதவியாக அரசால் அறிவிக்கப்பட்ட ரூ 2 ஆயிரமும் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான உதவித்தொகை தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. அந்த பின்னடைவில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத சூழலில், தற்போது சலூன் கடைகள் அடைப்பு அறிவிப்பு அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 
வாழ்வாதாரம் கேள்விக்குறி
முடிதிருத்தும் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்டது. எனவே அரசு மறுபரிசீலனை செய்து, எங்கள் வாழ்வாதாரத்திற்கு சலூன் கடைகளை அனுமதிக்க வேண்டுகிறோம். கொரோனா தொற்றின் வீரியத்தை, பரவலை நன்கு அறிவோம். நோய்த் தொற்று பரவாத வண்ணம் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை களை, அரசு அறிவித்த பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை களை சிறப்பாக கடைப்பிடித்து நோய் தொற்று பரவாமல் பாதுகாப்போடு பணி செய்வோம் என்று உறுதி அளிக்கி றோம். நிவாரண உதவிகள் கூட தேவையில்லை. நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாவது, சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.
உதவி கலெக்டர் அலுவலகத்திலும்...
மனுவைப் பெற்றுக் கொண்ட நகரசபை ஆணையாளர் ராஜாராம் மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்வதாக கூறியதன் பேரில் முடிதிருத்தும் தொழிலாளர்கள் கலைந்து சென்றார்கள். மருத்துவர் முடிதிருத்துவோர் தொழிலாளர் சங்க தலைவர்  மற்றும் நிர்வாகிகள் கோவில்பட்டி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நேர்முக உதவியாளர் முருகானந்தம் மற்றும் தாசில்தார் அமுதா ஆகியோரிடமும் கோரிக்கை மனு கொடுத்தனர்.

Next Story