சினிமா தியேட்டர், சலூன் கடைகள் மூடல்
புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள் மூடப்பட்டன.
திண்டுக்கல்:
புதிய கட்டுப்பாடுகள்
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த 20-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஞாயிற்றுக்கிழமை தோறும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. எனினும், கொரோனா பரவல் வேகம் குறையவில்லை.
ஒவ்வொரு நாளும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது.
எனவே, கொரோனா பரவலை தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
அதன்படி வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் சினிமா தியேட்டர்கள், சலூன் கடைகள், உடற்பயிற்சி கூடங்கள், மதுபான பார்கள், வணிக வளாகங்கள், கூட்ட அரங்குகள் ஆகியவை நேற்று முதல் மூடப்பட்டன.
19 தியேட்டர்கள்
இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 28 சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன.
ரசிகர்கள் வருகை குறைந்ததால் அவற்றில் 9 தியேட்டர்கள் ஏற்கனவே செயல்படவில்லை. இதனால் 19 தியேட்டர்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன.
அதிலும் 50 சதவீத ரசிகர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் நேற்று அந்த 19 தியேட்டர்களும் மூடப்பட்டன.
இதனால் புதிதாக வெளியான திரைப்படங்களை பார்த்து ரசிக்க முடியாமல் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
அதேபோல் மாவட்டம் முழுவதும் அனைத்து சலூன் கடைகளும் மூடப்பட்டன. பொதுவாக சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாலானவர்கள் முடிவெட்டி கொள்வது வழக்கம்.
சலூன் கடைகள்
எனவே, அந்த நாட்களில் தான் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு ஓரளவு வருமானம் கிடைக்கும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் சலூன் கடைகள் திறக்க முடியவில்லை.
இதற்கிடையே சலூன் கடைகளை முழுமையாக மூடியதால், மக்கள் சிரமப்பட்டனர்.
மேலும் முடிதிருத்தும் தொழிலாளர்கள் வருமானமின்றி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல் உடற்பயிற்சி கூடங்களும் திறக்கப்படவில்லை.
இதனால் விளையாட்டு வீரர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்ய முடியவில்லை.
இதில் பலர் காலையில் நடைபயிற்சி சென்றனர். மேலும் வீட்டிலும், ஊருக்கு வெளியே திறந்தவெளியிலும் உடற்பயிற்சிகளை மேற்கொண்டனர்.
இதுதவிர மதுபான பார்கள், வணிக வளாகங்களும் மூடப்பட்டன.
அதேநேரம் மளிகை, காய்கறி கடைகள் உள்ளிட்ட இதர கடைகள் வழக்கம் போல் இரவு 9 மணி வரை திறந்து இருந்தன.
Related Tags :
Next Story