மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவச தடுப்பூசி மந்திரி நவாப் மாலிக் தகவல்
மராட்டியத்தில் மே 1-ந்தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி போடப்படும் என மந்திரி நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மும்பை,
மராட்டியத்தை கொரோனா வாட்டி வதைத்து வருகிறது. தினமும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து மராட்டியத்தில் பாதிப்பை கட்டுப்படுத்தவும், தடுப்பூசி போடும் பணியை துரிதப்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நிலையில் வரும் மே 1-ந் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.
இதுகுறித்து தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மாநில சிறுபான்மையினர் விவகாரத்துறை மந்திரியுமான நாவப் மாலிக் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
வரும் மே 1-ந் தேதி முதல் ் தடுப்பூசி போடும் பணிகளுக்கு மாநில அரசின் நிதி பயன்படுத்தப்படும். மலிவு மற்றும் தரமான தடுப்பூசி வாங்க உலகளாவிய டெண்டர் விடப்படும்.
மத்திய அரசு 45 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு தடுப்பூசி வழங்காது என்பது தெளிவாகி உள்ளது. எனவே மாநில அரசு இந்த பொறுப்பை ஏற்கும்.
இதுகுறித்து கடந்த மந்திரி சபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் 45 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க தீர்மானிக்கப்பட்டது. முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் இந்த முடிவுக்கு ஒப்புக்கொண்டார்.
மராட்டியத்திற்கு ஒரு நாளைக்கு 26 ஆயிரம் டோஸ் ரெம்டெசிவிர் மருந்து மத்திய அரசு வழங்கி வந்தது. இந்த மருந்து எண்ணிக்கையை 50 ஆயிரமாக உயர்த்தவேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதை ஏற்று மத்திய அரசு மராட்டியத்துக்கு வழங்கப்படும் ரெம்ரெசிவிர் மருந்தின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயர்த்தியுள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்துகொள்கிறேன்.
50 ஆயிரம் மருந்துகளை வழங்கும் எங்கள் கோரிக்கையை ஏற்றுக்கொண்டால் ரெம்டெசிவிர் பற்றாக்குறை முடிவுக்கு வரும். முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மேலும் 10 ஆயிரம் டோஸ்களை பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story