கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமல்
விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன. இதையொட்டி வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மூடப்பட்டன.
விழுப்புரம்,
தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாகி வரும் நிலையில் அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், கேளிக்கை கூடங்கள், மதுக்கூடங்கள், பெரிய அரங்குகள், பெரிய கடைகள், வணிக வளாகங்கள், அழகு நிலையங்கள், சலூன்கள் ஆகியவை இயங்க அரசு தடை விதித்துள்ளதோடு வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் வழிபடுவதற்கும் தடை விதித்துள்ளது.
இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதே நேரத்தில் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி சில பணிகளை தொடரவும் அரசு அனுமதியளித்துள்ளது.
வழிபாட்டு தலங்கள், தியேட்டர்கள் மூடல்
அந்த வகையில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்த அரசின் புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் அமலுக்கு வந்துள்ளன. அதன்படி கோவில்கள் உள்ளிட்ட அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான கோவில்கள் நேற்று முதல் மூடப்பட்டிருந்தன. அதுபோல் தர்காக்கள், பள்ளிவாசல்கள், கிறிஸ்தவ ஆலயங்களும் மூடப்பட்டிருந்தன.
மேலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களான சினிமா தியேட்டர்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. விழுப்புரம், விக்கிரவாண்டி, வளவனூர், அனந்தபுரம், பாக்கம் கூட்டுசாலை, கண்டமங்கலம், செஞ்சி, திண்டிவனம் உள்பட மாவட்டம் முழுவதும் உள்ள 18 சினிமா தியேட்டர்கள் மூடிக்கிடந்தன. அதேபோல் மாவட்டத்தில் உள்ள உடற்பயிற்சி கூடங்கள், பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகளும் இயங்கவில்லை.
வணிக வளாகங்கள் அடைப்பு
மாவட்டத்தில் உள்ள பெரிய கடைகள், வணிக வளாகங்கள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் அவை அடைக்கப்பட்டிருந்தன. அதுபோல் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள், காய்கறி கடைகளுக்கு அனுமதி இல்லாததால் அந்த கடைகளும் பூட்டிக்கிடந்தன. அதே நேரத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள் மற்றும் இதர அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளும் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்கின. அதுபோல் தனியாக செயல்படுகிற மளிகை உள்பட பலசரக்குகள் மற்றும் காய்கறிகள் விற்பனை செய்யும் பெரிய கடைகள் மற்றும் நகை கடைகள், ஜவுளிக்கடைகள் குளிர்சாதன வசதியின்றி இயங்கின. அந்த கடைகளில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும் விழுப்புரம், திண்டிவனம், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சி பகுதிகளில் உள்ள சலூன் கடைகள், அழகு நிலையங்கள் அடைக்கப்பட்டிருந்தன.
போக்குவரத்து
விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் இயக்கப்பட்ட பஸ்களில் இருக்கைகளில் பயணிகள் அமர்ந்து செல்ல மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. இருக்கைகள் நிரம்பிய பிறகு பஸ்களில் ஏறிய பயணிகளை பஸ் கண்டக்டர்கள் அனுமதிக்காமல் வேறொரு பஸ்சில் வரும்படி கூறி பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர். அதேநேரத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகளுக்கு சானிடைசர் திரவம் கொடுத்து கைகளை தேய்த்து சுத்தம் செய்த பிறகே பஸ்சிற்குள் செல்ல அனுமதித்தனர். முக்கியமாக முக கவசம் அணிந்து வந்தவர்கள் மட்டுமே பஸ்சிற்குள் அனுமதிக்கப்பட்டனர். தனியார் பஸ்களிலும் இதே நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டது. அதுபோல் ஆட்டோவில் ஓட்டுனரை தவிர்த்து 2 பயணிகளும், வாடகை கார்களில் ஓட்டுனர் தவிர்த்து 3 பயணிகளும் செல்ல அனுமதியளிக்கப்பட்டது.
ஓட்டல்களில் பார்சல் மட்டும்
ஓட்டல்களில் ஓட்டல்களில் பொதுமக்கள் அமர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டது. அதேவேளையில் பார்சல் சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் அனைத்தும் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா? என்று மாவட்டம் முழுவதும் அரசு அதிகாரிகள், போலீசார் ஆய்வு மேற்கொண்டு கண்காணித்தனர். அதேநேரத்தில் விதியை மீறிய பொதுமக்கள் மற்றும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
Related Tags :
Next Story