முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் ஊர் சுற்றிய 588 பேருக்கு அபராதம்
விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை மீறி தேவையில்லாமல் ஊர் சுற்றிய 588 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
விழுப்புரம்,
கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக காணப்படுவதால் அதை முற்றிலும் கட்டுப்படுத்தும் வகையில் நேற்று முன்தினம் (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் முழுவதும் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக விழுப்புரம் மாவட்டம் முழுவதும் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. மருந்து கடைகள், ஓட்டல்கள் (பார்சல் சேவை மட்டும்) தவிர அனைத்து அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தது. இதனால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
இந்த சூழலிலும் சிலர் கட்டுக்கடங்காமல் வீட்டை விட்டு வெளியே வந்து தேவையில்லாமல் சாலைகளில் சுற்றித்திரிந்தனர். அவ்வாறு சுற்றித்திரிந்தவர்களில் பலர் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளியை பின்பற்றாமலும் இருந்தனர். அவர்களை போலீசார் மடக்கிப்பிடித்து எச்சரிக்கை செய்ததோடு மட்டுமின்றி அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டனர்.
588 பேருக்கு அபராதம்
அந்த வகையில் நேற்று முன்தினம் விழுப்புரம் உட்கோட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்த 184 பேர் மீதும், கோட்டக்குப்பம் உட்கோட்டத்தில் 64 பேர் மீதும், திண்டிவனம் உட்கோட்டத்தில் 151 பேர் மீதும், செஞ்சி உட்கோட்டத்தில் 185 பேர் மீதும் ஆக மொத்தம் 584 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களிடமிருந்து தலா ரூ.200 வீதம் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 800-ஐ அபராதமாக வசூலித்தனர். இதுதவிர சமூக இடைவெளியை பின்பற்றாத 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தலா ரூ.500 வீதம் ரூ.2 ஆயிரம் அபராதம் வசூலித்தனர்.
Related Tags :
Next Story