கோவையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பார்கள் மூடல்


கோவையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பார்கள் மூடல்
x
தினத்தந்தி 26 April 2021 10:41 PM IST (Updated: 26 April 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கோவையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பார்கள், கோவில்கள் மூடப்பட்டன.

கோவை

புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்ததால் கோவையில் தியேட்டர்கள், வணிக வளாகங்கள், பார்கள், கோவில்கள் மூடப்பட்டன. வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.

புதிய கட்டுப்பாடுகள்

கோவை உள்பட தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா முதல் அலையை காட்டிலும் 2-வது அலை கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி மக்களை அச்சுறுத்தி வருகிறது.

 கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு சில கட்டுப்பாடுகளை விதித்து உள்ளது. அதில் இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் தற்போது அமலில் உள்ளன.

எனினும் தொற்றின் வேகம் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்து சென்றது. இதனால் மேலும் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு கடந்த 24-ந் தேதி அறிவித்தது.

தியேட்டர்கள் மூடப்பட்டன

அதன்படி அனைத்து சினிமா தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், அனைத்து மதுக்கூடங்கள் (பார்), பெரிய அரங்குகள், கூட்ட அரங்குகள் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்கள் இயங்க அனுமதி அளிக்கப்படவில்லை. 

இதுபோன்று பெரிய கடைகள், வணிக வளாகங்கள் (ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், மால்கள்) இயங்க கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதேவேளையில் வணிக வளாகங்களில் இயங்கும் பலசரக்கு கடைகள் மற்றும் காய்கறி கடைகளுக்கும் அனுமதி இல்லை.

ஆனால் தனியாக செயல்படும் மளிகை கடை, காய்கறி கடைகள், பெரிய கடைகள் (டிபார்ட்மென்டல் ஸ்டோர்), குளிர்சாதன வசதியின்றி இயங்கவும், அங்கு ஒரே சமயத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தன. 

இதுதவிர கோவில்கள், தேவாலயங்கள், வழிபாட்டு தலங்களில் பக்தர்களுக்கு அனுமதியில்லை. ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி என்பன போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஓட்டல்களில் பார்சலுக்கு மட்டுமே அனுமதி

கோவையில் இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று அதிகாலை 4 மணி முதல் அமலுக்கு வந்தன. இதன்காரணமாக கோவையில் உள்ள தியேட்டர்கள், உடற்பயிற்சி கூடங்கள், பொழுதுபோக்கு கூடங்கள், மதுபான பார்கள், வணிக வளாகங்கள், கூட்ட அரங்குகள் மூடப்பட்டன. 

அத்துடன் சலூன் கடைகளுக்கும் அனுமதி இல்லை என்பதால் அந்த கடைகளும் மூடப்பட்டன. சலூன்கடைகள் மூடப்பட்டு இருந்ததால் பொதுமக்கள் பலர் முடிதிருத்தம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்.

ஓட்டல்களில் பார்சல் சாப்பாட்டுக்கு மட்டுமே அனுமதி என்பதால் ஓட்டல்களில் பார்சல் சாப்பாடுகளை ஊழியர்கள் முன்கூட்டியே தயார்நிலையில் வைத்து இருந்தனர். வாடிக்கையாளர்கள் அதனை பெற்றுச்சென்றனர். ஆனால் எதிர்பார்த்த அளவு விற்பனை இல்லை என்று ஓட்டல் உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

கோவில்கள் மூடல்

கோவை கோனியம்மன் கோவில், உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் உள்பட அனைத்து பெரிய கோவில்களும் மூடப்பட்டன. இதனால் அங்கு வந்த பக்தர்கள் கோவிலின் வெளியே நின்று சாமி கும்பிட்டு சென்றனர். ஒருசிலர் கோவில் வெளியே கற்பூரம் ஏற்றிவைத்து சாமியை தரிசனம் செய்தனர். 

சில கோவில்களின் வெளியே தகவல் பலகை வைக்கப்பட்டு அதில், 26-ந் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று எழுதப்பட்டு இருந்தது. தேவாலயங்கள், மசூதி, தர்காக்கள் மூடப்பட்டு இருந்தன. 

Next Story