கொரோனா பரவல்: மருதமலை முருகன் கோவில் மூடப்பட்டது


கொரோனா பரவல்: மருதமலை முருகன் கோவில் மூடப்பட்டது
x
தினத்தந்தி 26 April 2021 10:41 PM IST (Updated: 26 April 2021 10:41 PM IST)
t-max-icont-min-icon

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக மருதமலை முருகன் கோவில் மூடப்பட்டது.

வடவள்ளி

கொரோனா பரவல் எதிரொலி காரணமாக மருதமலை முருகன் கோவில் மூடப்பட்டது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் கோவில் படிக்கட்டு முன்பு சூடம் ஏற்றி வழிபட்டு சென்றனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பு

கோவை வடவள்ளியில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். இந்த நிலையில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கோவில்களில் பக்தர்களுக்கு தடை, வணிக வளாகங்கள், சினிமா தியேட்டர்கள் திறக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

இதன் காரணமாக மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் மூடப்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். கோவிலில் வழக்கம்போல் நடைபெறும் பூஜை மட்டும் நடைபெற்றது.

சூடம் ஏற்றி வழிபாடு

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் மலைக்கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை என்பதால் மலைப்பாதை முன்புறம் உள்ள படிக்கட்டுகளில் தங்கள் குடும்பத்துடன் சூடம் மற்றும் விளக்கு ஏற்றி தேங்காய் பழம் உடைத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறுகையில், கொரோனோ பரவல் காரணமாக கோவில்களில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அரசு தெரிவித்துள்ளது. இந்த நிலை விரைவில் மாறியதும் பக்தர்கள் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்றனர். 

Next Story