சலூன் கடைகளை திறக்க அனுமதிக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு
சலூன் கடைகளை திறக்க அனுமதிக்ககோரி கலெக்டர் அலுவலகத்தில் முடி திருத்தும் தொழிலாளர்கள் மனு கொடுத்தனர்.
கரூர்
குறைதீர்க்கும் நாள் கூட்டம்
கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறுவது வழக்கம். தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறையில் உள்ளதால் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறாத நிலையில் கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வருபவர்கள் அங்கு வைக்கப்பட்டு உள்ள புகார் பெட்டியில் குறைகளை அடங்கிய மனுக்களை போடும் வகையில் பெட்டி வைக்கப்பட்டு இருந்தது.
முடிதிருத்தும் தொழிலாளர்கள்
அதன்படி நேற்று கரூர் மாவட்ட முடிதிருத்தும் தொழிலாளர் நலச் சங்கம் சார்பில் அந்தப் பெட்டியில் போடப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது:- கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட ஊரடங்கால் 6 மாதங்கள் வாழ்வாதாரத்தை இழந்து, பசி மற்றும் கடன் தொல்லைகளால் அவதி அடைந்தோம். அப்போது நிவாரண உதவியாக அரசால் வழங்கப்பட்ட ரூ.2 ஆயிரம் சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பலருக்கு கிடைக்கவில்லை.
இந்தநிலையில் மீண்டும் சலூன் கடைகள் அடைப்பு என்ற அறிவிப்பு அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எங்களது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே பாதுகாப்பு நெறிமுறைகளை கடைப்பிடித்து சலூன் கடைகளை திறந்து நாங்கள் பணி செய்ய தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
ஏலச்சீட்டு நடத்தி பணம் மோசடி
இதேபோல் தோகைமலை அருகே உள்ள கீழவெளியூர் மற்றும் அதன் சுற்று வட்டார. பகுதியைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திரண்டு வந்து போட்ட மனுவில், கீழவெளியூர் பகுதியை சேர்ந்த ஒருவர் எங்களிடம் ஏலச்சீட்டு நடத்தி பணத்தை பெற்று மோசடி செய்துள்ளனர். இதுகுறித்து அவரிடம் கேட்டால் எங்களை மிரட்டி வருகின்றார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறியிருந்தனர்.
Related Tags :
Next Story