லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலி


லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலி
x
தினத்தந்தி 27 April 2021 1:19 AM IST (Updated: 27 April 2021 1:19 AM IST)
t-max-icont-min-icon

லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலியானார்.

மணிகண்டம், ஏப்.27-
லாரி மோதி நகைக்கடை ஊழியர் பலியானார்.
நகைக்கடை ஊழியர்
திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பொன்னர் (வயது 28). இவர் மலைக்கோட்டை பகுதியில் உள்ள ஒரு பிரபல நகை கடையில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.
நேற்று காலை இவர் சொந்தவேலையாக மோட்டார் சைக்கிளில் விராலிமலை சென்றுவிட்டு மீண்டும் திருச்சிக்கு அதே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது மதுரை-திருச்சி நான்கு வழிச்சாலையில் மணிகண்டம் போலீஸ் நிலையம் அருகே சென்றபோது எதிரே ஒரு வழிப்பாதையில் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக பொன்னர் ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில்  படுகாயமடைந்த பொன்னரை மணிகண்டம் போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
 இந்த விபத்து குறித்து மணிகண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் திருமானூர் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (33) என்பவரை கைது செய்தனர்.
பிளம்பர் தற்கொலை
*ஜீயபுரம் அருகே உள்ள பழூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மகன் விக்னேஷ் (22). பிளம்பரான இவர் வயிற்றுவலி காரணமாக வீட்டில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜீயபுரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
*ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ஒரு பெண் வெளியூரில் இருந்து ரெயிலில் திருச்சி ஜங்ஷன் வந்தார். பின்னர் ஆட்டோவில் முககவசம் அணியாமல் ஸ்ரீரங்கம் சென்றார். போலீசார் நடத்திய சோதனையில் அவர் முககவசம் அணியாததால் ரூ.200 அபராதம் விதித்தனர்.
*திருச்சி உய்யகொண்டான் திருமலை எம்.எம் நகரை சேர்ந்த சரஸ்வதி (40) மோட்டார் சைக்கிளில் முககவசம் அணியாமல் சென்ற அவருக்கு அரசு மருத்துவமனை போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்.
பேக்கரி கடை உரிமையாளர் மீது வழக்கு
*திருச்சி தென்னூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் மாரிசாமி (36). இவர் தென்னூர் மந்தை எதிரில் பேக்கரி கடை நடத்தி வருகிறார். முழுஊரடங்கான நேற்று முன்தினம் கடையை திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டதால் தில்லைநகர் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
சூதாடிய 9 பேர் மீது வழக்கு
*திருச்சி கீழ தேவதானம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த பிரியதர்ஷன், நாகேந்திரன் உள்பட 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 சீட்டுக்கட்டு, ரூ.ஆயிரத்து 450-ஐ பறிமுதல் செய்தனர்.
*உப்பிலியபுரம் மற்றும் பாலகிருஷ்ணம்பட்டி பேரூராட்சி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கில் வியாபாரத்தில் ஈடுபட்ட வியாபாரிகளுக்கு பேரூராட்சி அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
* புள்ளம்பாடி அருகே உள்ள பாத்திமாநகரை சேர்ந்தவர் ராஜூ (70). விவசாய கூலி தொழிலாளியான இவர் குடும்ப பிரச்சினை காரணமாக பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கல்லக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
* தா.பேட்டை அருகே மகாதேவி பகுதியில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்ற ஆறுமுகம் (50) என்பவரை முசிறி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கைது செய்து மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இதேபோன்று தா.பேட்டை அருகே நெட்டவேலம்பட்டி ஏரிக்கரை பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை விற்ற சுப்ரமணியன் (48) என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.
*திருச்சி காஜாமலை காலனி பஸ் நிறுத்தம் அருகே மயங்கி கிடந்த பெருமாள் (60), இதேபோல் திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் மயங்கி கிடந்த 70 வயது  மூதாட்டி ஆகியோர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி இறந்தனர்.
*உப்பிலியபுரத்தை அடுத்த பி.மேட்டூரை சேர்ந்தவர் வீரப்பன் (62). நேற்று இவர் அருகே உள்ள தோட்டத்திற்கு  நடந்து சென்றார். இந்த நிலையில் நேற்று வெயில் கடுமையாக இருந்தது. இதனால் திடீரென்று சாலையில் மயங்கி விழுந்த வீரப்பன் சுருண்டு விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
விமான சேவை ரத்து
* சென்னையில் இருந்து காலை 10-45 மணி, மதியம் 2-40, இரவு 9-15 மணிக்கு திருச்சிக்கு விமானங்கள் வந்து மீண்டும் இங்கிருந்து புறப்பட்டு சென்னை நோக்கி சென்றன. கொரோனா தொற்று காரணமாக திருச்சியிலிருந்து சென்னை செல்லும் இரவு நேர விமான சேவை மட்டும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
* லால்குடி அருகே திருச்சி-சிதம்பரம் புதிய தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. திருமங்கலத்தை அடுத்த உப்பாறு கரையோரம் 500 ஏக்கருக்கு மேல் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. உரம், பூச்சி மருந்து மற்றும் இடுபொருட்களை அணுகு சாலைகளில் சென்றுவர ஏதுவாக யூ டேன் அமைத்துக் கொடுக்க வேண்டுமென நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வாகனங்களை மறித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Next Story