நாமக்கல்லில் உழவர் சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை தொடா்ந்து, நாமக்கல்லில் உழவர் சந்தை, வாரச்சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை செயல்படும் இடங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
மோகனூர்:
கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பை தொடா்ந்து, நாமக்கல்லில் உழவர் சந்தை, வாரச்சந்தை, தினசரி காய்கறி மார்க்கெட் ஆகியவை செயல்படும் இடங்கள் தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
வாரச்சந்தை, காய்கறி மார்க்கெட் இடமாற்றம்
நாமக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வருவதால், பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு நகராட்சி நிர்வாகம் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை நேற்று எடுத்தது.
குறிப்பாக கடந்த ஆண்டு கொரோனா தொற்று காலத்தில் நகராட்சி அலுவலகம் அருகே இயங்கி வந்த வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு இயங்கி வந்தன.
அதே நடைமுறையை கொரோனா பரவலை தடுக்க மீண்டும் செயல்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி நேற்று காலை முதல் வாரச்சந்தை மற்றும் தினசரி காய்கறி மார்க்கெட் திருச்செங்கோடு சாலையில் உள்ள நல்லிபாளையம் வடக்கு அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்துக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளன.
உழவர் சந்தை
இதே போல நாமக்கல் உழவர் சந்தை மோகனூர் சாலையில் உள்ள தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு தற்காலிமாக இடமாற்றம் செய்யப்பட்டு அங்கு நேற்று முதல் செயல்பட தொடங்கியது.
இது குறித்து உழவர் சந்தை நிர்வாக அலுவலர் மல்லிகா கூறியதாவது:-
நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளிக்கு உழவர் சந்தை தற்காலிகமாக 26-ந் தேதி (நேற்று) முதல் செயல்பட இடமாற்றம் செய்யப்பட்டு செயல்பட தொடங்கி உள்ளது. முககவசம் அணிந்து வந்தவர்கள் மட்டும் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
107 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். அனைத்து காய்கறிகளும் விலை ஏற்றம் இல்லாமல் வழக்கமான விலைக்கே விற்கப்பட்டன. மறு உத்தரவு வரும் வரை இந்த பள்ளி வளாகத்தில் சந்தை நடைபெறும். பொதுமக்கள் இங்கு வந்து காய்கறி மற்றும் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story