தென்காசி தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்


தென்காசி தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
x
தினத்தந்தி 27 April 2021 1:36 AM IST (Updated: 27 April 2021 1:36 AM IST)
t-max-icont-min-icon

தென்காசி தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தென்காசி, ஏப்:
தென்காசி தனியார் ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல்

கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முக்கிய நகரங்களில் ஆஸ்பத்திரிகள் நோயாளி களால்  நிரம்பி வருகின்றன.
கொரோனா நோயாளிகளுக்கு அரசு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்படுவது மட்டுமல்லாமல் வசதிகள் அதிகமாக உள்ள சில தனியார் ஆஸ்பத்திரிகளை ஒவ்வொரு நகரங்களிலும் அரசு தேர்வு செய்து அங்கு இந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அனுமதி அளித்துள்ளது. அதன்படி அந்த ஆஸ்பத்திரிகளில் தனியாக வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கிறார்கள்.

தென்காசியில் தட்டுப்பாடு

தென்காசியில் 2 தனியார் ஆஸ்பத்திரிகளில் இதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த இரு ஆஸ்பத்திரிகளிலும் கொரோனா நோயாளிகள் பெரும்பாலான படுக்கைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். குற்றாலம் ரோட்டில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் இதற்கென பிரத்யேகமாக உள்ள தளத்தில் நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சுமார் 30 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனை நிரப்பி வரும் தனியார் நிறுவனங்கள் குறித்த நேரத்தில் இவர்களுக்கு சிலிண்டர்களை வினியோகம் செய்ய முடியவில்லை. இதனால் நோயாளிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் நிலை உள்ளது.

அரசு உதவ வேண்டும்

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் நிர்வாகி டாக்டர் முகம்மது மீரான் கூறியதாவது:-
தற்போது கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் எங்களது ஆஸ்பத்திரியில் 50 சதவீத படுக்கைகளை ஒதுக்கீடு செய்து கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம். எங்களிடம் மருந்துகள், ஊசி, உபகரணங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. ஆனால் போதுமான சிலிண்டர்கள் கிடைக்காததால் இருப்பதை வைத்து மிகுந்த கஷ்டத்தில் சிகிச்சை அளிக்கிறோம். தற்போது எங்களிடம் மேலும் படுக்கை வசதி உள்ளது. ஆனால் நோயாளிகளை அனுமதிக்க முடியவில்லை. இதற்கு காரணம் சிலிண்டர்களின் தட்டுப்பாடு தான். எனவே அரசு உதவி செய்து கொரோனா சிகிச்சை அளிக்கும் அனைத்து ஆஸ்பத்திரிகளுக்கும் தட்டுப்பாடில்லாமல் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கிடைக்க அரசு உதவி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Next Story