கர்நாடகத்தில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட சேவைகள் விவரம்; மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு தடை


கர்நாடகத்தில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட சேவைகள் விவரம்; மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு தடை
x
தினத்தந்தி 27 April 2021 2:07 AM IST (Updated: 27 April 2021 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட சேவைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு: கர்நாடகத்தில் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்பட்ட சேவைகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ரெயில்கள் இயக்கப்படாது

கர்நாடகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் நோக்கத்தில் இன்று இரவு (செவ்வாய்க்கிழமை) முதல் 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கின்போது சில தொழில் நிறுவனங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு விலக்கு அளித்து கர்நாடக அரசு புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள அம்சங்கள் வருமாறு:-

அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், உற்பத்தி நிறுவனங்கள் தொடர்புடைய சரக்குகளை எடுத்துச் செல்லும் வாகனங்கள், மின்னணு வணிக நிறுவன வாகனங்கள் உள்பட அனைத்து வகையான சரக்கு வாகனங்கள் போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அரசு, தனியார் பஸ்கள், பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படாது.

அவசர போக்குவரத்து

மாநிலங்களுக்கு இடையோன போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டங்களுக்கு இடையே அவசர போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. அரசால் அனுமதிக்கப்பட்ட அலுவலகம் செல்வோர் அடையாள அட்டைகளை காட்டிவிட்டு செல்லலாம். மெஜஸ்டிக்கில் இருந்து விமான நிலையம் செல்லும் பஸ்களுக்கு அனுமதி உண்டு. இதில் பயணிப்பவர்கள் விமான டிக்கெட்டுகளை காட்ட வேண்டும்.

அவசர தேவைக்காக ஆட்டோ, வாடகை கார்கள் செல்லலாம். கட்டுமான பணிகளில் ஈடுபடுபவர்களுக்கு அந்தந்த நிறுவனங்கள் அடையாள அட்டை வழங்க வேண்டும். அவற்றை பயன்படுத்தி அவர்கள் வேலைக்கு சென்று வரலாம். நோயாளிகள் அவர்கள் பயணிக்கும் வாகனங்களை அனுமதிக்கலாம்.

காய்கறி கடைகள்

உணவு பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பலசரக்கு கடைகள், பழம், காய்கறி கடைகள், பால் கடைகள், இறைச்சி, மீன் கடைகள், கால்நடை தீவன கடைகள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது. வீடுகளுக்கு நேரடியாக பொருட்களை கொண்டு சென்று வினியோகம் செய்ய அனுமதி உண்டு.

அனைத்து உணவு பதப்படுத்தும் தொழில்கள், வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்கள், ஏ.டி.எம். மையங்கள், பத்திரிகை, காட்சி ஊடகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. தொலைத்தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள், அவற்றில் பணியாற்றும் ஊழியர்கள் பணிக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. மின்சார உற்பத்தி, வினியோக நிறுவனங்கள் செயல்படலாம்.

கட்டுமான பணிகள்

குளிர்பதன கிடங்குகள், தனியார் காவல் சேவை வழங்கும் நிறுவனங்கள், விமானத்துறை சார்ந்த சேவைகள் செயல்படலாம். ஆயத்த ஆடை நிறுவனங்கள் தவிர பிற தொழில் நிறுவனங்கள் அனைத்தும் விதிமுறைகளை பின்பற்றி செயல்படலாம். இந்த நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அடையாள அட்டையை காண்பித்து பயணிக்கலாம்.

அனைத்து வகையான கட்டுமான பணிகளை மேற்கொள்ளலாம். திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்துகொள்ள வேண்டும். இறுதிச்சடங்கில் 5 பேர் பங்கேற்கலாம். அனைத்து மருத்துவமனைகள், ஆய்வகங்கள், தொலைதூர மருத்துவ சேவை மையங்கள், மருந்தகங்கள், ரத்த வங்கிகள், மருத்துவ உபகரணங்கள் விற்கும் கடைகள், மருந்து உற்பத்தி நிறுவனங்கள், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள், அதற்கு தேவையான மூலப்பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் செயல்படலாம்.

கோழிப்பண்ணைகள்

விவசாய பணிகள், விவசாய உபகரணங்களை விற்பனை செய்யும் கடைகள், கிடங்குகள், கோழிப்பண்ணைகள், மீன் வளர்ப்பு நிலையங்கள், இறைச்சி கூடங்கள் செயல்படலாம். ஆதரவற்றோர் இல்லங்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் காப்பகங்கள், கிராமப்புற வேலை வாய்ப்பு திட்ட பணிகளை மேற்கொள்ளலாம்.

இரவு நேர ஊரடங்கின்போது அனைத்து சேவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தொழில் நிறுவனங்கள் செயல்படலாம்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.

Next Story