விதை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறுவோர் மீது குற்றவியல் நடவடிக்கை
விதை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறும் விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
விருதுநகர்,
விதை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறும் விற்பனையாளர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என விதை ஆய்வு துணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
விதை ஆய்வு
இதுகுறித்து விருதுநகர் விதைஆய்வு துணைஇயக்குனர் நாச்சியாரம்மாள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மாவட்டத்தில் விதைச்சான்று மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் கீழ் இயங்கும் விதைஆய்வு த்துறையில் விதை ஆய்வு துணை இயக்குனர் தலைமையில் விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அருப்புக்கோட்டை பகுதியில் துறை ஆய்வாளர்கள், அரசு சார்ந்த மற்றும் தனியார் விதைவிற்பனை நிலையங்களில் விதை ஆய்வு பணியை மேற்கொண்டு விதை இருப்பு தரம், விதை பராமரிப்பு பதிவு சான்றிதழ் பரிசோதனை அறிக்கை ஆகியவற்றை ஆய்வு செய்தனர்.
நடவடிக்ைக
மேலும் விதைகள் விவசாயிகளுக்கு விற்பனையாகும் முன்பே விதை மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.
தரக்குறைவு என தெரிந்தால் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. விதைகள் இருப்பு மற்றும் வினியோகம் முறையாகவும் பருவத்திற்கு உகந்ததாக உள்ளதா எனவும் கண்காணிக்கப்படுகிறது. தவறு செய்யும் உற்பத்தியாளர்கள், விற்பனையாளர்கள் மீது உரிமம் ரத்து செய்து நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
விதிமுறைகள்
விதை விற்பனை செய்ய விற்பனை நிலைய உரிமையாளர்கள் விதிமுறைகளையும், அறிவுரைகளையும் தவறாமல் பின்பற்ற வேண்டும்.
விதை விற்பனை உரிமத்தை பார்வையில் படும்படி மாட்டி வைக்க வேண்டும். விதை விற்பனை நிலையத்தில் இருப்பில் உள்ள விதைகளின் ரகங்கள், அதன் விலை போன்ற தகவல்களை அன்றாடம் பூர்த்தி செய்து தகவல் பலகை பார்வைக்கு தெரியும்படி வைக்கவேண்டும். இதற்கென்று தனியாக இருப்பு பதிவேடு வைத்திருக்க வேண்டும்.
விதை விற்பனை செய்யும்போது கண்டிப்பாக விற்பனை பட்டியல் வழங்க வேண்டும். விவரஅட்டை இல்லாத விதைகளை விற்பனை செய்யக்கூடாது. தனியார் வீரிய ஒட்டு ரகங்களுக்கு சான்று இயக்குனர் கோவை பதிவு எண் உள்ளதா என்பதை பதிவு சான்றிதழ் பெற்று விற்பனை செய்ய வேண்டும்.
பரிசோதனை சான்றிதழ்
அனைத்து நிலைகளுக்கும் பணிவிடை மாதிரி பரிசோதனை சான்றிதழ் பெற்ற பின்னரே விற்பனை செய்ய வேண்டும்.
காலாவதியான விதைகளை விற்பனை செய்யவோ அல்லது கடையில் வைத்திருக்கக்கூடாது. விற்பனை உரிமம் பெறாமல் விற்பனை செய்யவோ கூடாது. முளைப்புத் திறன் குறைந்த விதைகளை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள், வினியோகஸ்தர்கள் மற்றும் விதை உற்பத்தியாளர்கள் இதனால் தண்டிக்கப்படுகிறார்கள். தவறு செய்வது முதல் முறையாக இருப்பின் ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்.
சிறை தண்டனை
அவரே 2-வது முறையும் தவறு செய்தால் ரூ.1000 அபராதம் அல்லது ஆறு மாதம் சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.
மேலும் விதை கட்டுப்பாட்டு சட்டத்தை மீறும் பட்சத்தில் அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தின் கீழ் ஒரு வருடம் சிறை தண்டனை மற்றும் அபராதம் சேர்த்து வழங்கப்படும். மூன்று மாத காலத்தில் குறையாமலும், 7 வருட காலம் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story