மணப்பெண்ணுக்கு கொரோனா; திருமணம் திடீர் ரத்து
கொப்பல் அருகே, இல்லற வாழ்க்கையில் இணைய இருந்த மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கொப்பல்: கொப்பல் அருகே, இல்லற வாழ்க்கையில் இணைய இருந்த மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் திருமணம் ரத்து செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
திருமணம் முடிவு
பெங்களூரு உள்பட கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொப்பலில் இல்லற வாழ்க்கையில் இணைய இருந்த மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
கொப்பல் மாவட்டம் கின்னாலே கிராமத்தில் 21 வயது இளம்பெண் வசித்து வருகிறார். அவருக்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் திருமணம் செய்ய 2 பேரின் பெற்றோரும் முடிவு செய்திருந்தார்கள். அதன்படி, இளம்பெண்ணுக்கும், வாலிபருக்கும் 26-ந் தேதி (அதாவது நேற்று) திருமணம் நடைபெற இருந்தது.
மணப்பெண்ணுக்கு கொரோனா
இதற்கான ஏற்பாடுகளை மணமகன், மணமகள் வீட்டார் செய்து வந்தனர். இந்த நிலையில், மணப்பெண்ணான இளம்பெண்ணுக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. காய்ச்சல், தலைவலி, இருமலால் அவதிப்பட்டார். இதற்காக இளம்பெண் சிகிச்சை பெற்று வந்தார். மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனையும் நடத்தப்பட்டது. நேற்று திருமணம் நடைபெற இருந்த நேரத்தில், காலையில் கொரோனா பரிசோதனை அறிக்கையில் மணப்பெண்ணுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனால் மணப்பெண், மணமகன் கடும் அதிர்ச்சி அடைந்தார்கள். மேலும் கொரோனா அறிகுறி இருப்பதால் மணப்பெண் உடனடியாக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மணப்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் நேற்று நடைபெற இருந்த திருமணமும் ரத்து செய்யப்பட்டது. இந்த சம்பவம் கின்னாலே கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story