கொரோனா கட்டுப்பாடுகளால் மூட உத்தரவு: சேலத்தில் தடையை மீறி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா?-மாவட்ட மேலாளர் ஆய்வு


கொரோனா கட்டுப்பாடுகளால் மூட உத்தரவு: சேலத்தில் தடையை மீறி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா?-மாவட்ட மேலாளர் ஆய்வு
x
தினத்தந்தி 27 April 2021 5:09 AM IST (Updated: 27 April 2021 5:09 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா புதிய கட்டுப்பாடுகளால் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தடையை மீறி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.

சேலம்:
கொரோனா புதிய கட்டுப்பாடுகளால் பார்களை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, தடையை மீறி டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்பது குறித்து மாவட்ட மேலாளர் ஆய்வு மேற்கொண்டார்.
பார்களில் ஆய்வு
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் டாஸ்மாக் கடைகள் மதியம் 12 மணி முதல் இரவு 9 மணி வரை செயல்படவும், கடையை ஒட்டி உள்ள பார்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் நேற்று அமலுக்கு வந்தது.
சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் மொத்தம் 220 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதில், 68 இடங்களில் மட்டும் பார்கள் இயங்கி வருகிறது. கொரோனா புதிய கட்டுப்பாடுகளால் 68 பார்களையும் மறு உத்தரவு வரும்வரை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில், நேற்று மதியம் 12 மணிக்கு அனைத்து டாஸ்மாக் கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. ஆனால் அதையொட்டி உள்ள 68 பார்கள் எதுவும் திறக்கப்படவில்லை. இருப்பினும் கட்டுப்பாடுகள் உத்தரவை மீறி சேலத்தில் டாஸ்மாக் பார்கள் செயல்படுகிறதா? என்பது குறித்து டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அம்பாயிரநாதன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
குற்றவியல் நடவடிக்கை
சேலம் அரசு ஆஸ்பத்திரியில் இருந்து பால் மார்க்கெட் செல்லும் வழியில் உள்ள 2 டாஸ்மாக் கடை பார்கள், முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள டாஸ்மாக் பார்களுக்கு மாவட்ட மேலாளர் சென்று ஆய்வு செய்தபோது, அங்கு பார்கள் மூடப்பட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் அவர், அங்கிருந்த ஊழியர்களிடம் எக்காரணத்தை கொண்டும் பார்களை திறக்கக்கூடாது என்றும், தடை உத்தரவை மீறி திறந்தால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், டாஸ்மாக் கடை ஊழியர்கள் அனைவரும் முககவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். அதேபோல், முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்து வரும் மதுபிரியர்களுக்கு மட்டுமே மதுவகைகள் விற்பனை செய்ய வேண்டும் என்று ஊழியர்களுக்கு மாவட்ட மேலாளர் அம்பாயிரநாதன் அறிவுறுத்தினார்.
சந்து கடைகளில்...
இதனை தொடர்ந்து அவர் ஓமலூர், காடையாம்பட்டி, மேட்டூர், ஆத்தூர், எடப்பாடி, வாழப்பாடி உள்பட மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் பார்கள் மூடப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் ஆய்வு செய்தார். தமிழக அரசின் உத்தரவுப்படி கொரோனா கட்டுப்பாடு விதிகளை முறையாக பின்பற்றி வருகிறோம். மறு உத்தரவு வரும்வரை டாஸ்மாக் பார்கள் இயங்காது. சந்து கடைகளில் மதுவிற்பனை செய்பவர்கள் மீது போலீஸ் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட மேலாளர் அம்பாயிரநாதன் தெரிவித்தார்.

Next Story