மல்லூர் அருகே லாரி கவிழ்ந்து சுமை தூக்கும் தொழிலாளி பலி-இழப்பீடு வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டம்
மல்லூர் அருகே லாரி கவிழ்ந்து சுமை தூக்கும் தொழிலாளி பலியானார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பனமரத்துப்பட்டி:
மல்லூர் அருகே லாரி கவிழ்ந்து சுமை தூக்கும் தொழிலாளி பலியானார். அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க கோரி தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொழிலாளி
சேலம் சின்னபுதூரை சேர்ந்தவர் ஹரிபிரசாத் (வயது 42.) இவர் ஜவ்வரிசி மூட்டைகளை ஏற்றி இறக்கும் சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை காலை மல்லூர் அருகே தனியார் குடோனில் ஜவ்வரிசி மூட்டைகளை இறக்குவதற்காக சேலத்தில் இருந்து லாரி ஒன்று சென்றது.
அந்த லாரியை ராசிபுரம் தொப்பம்பட்டி பகுதியை சேர்ந்த சாமியப்பன் என்பவர் ஓட்டி வந்தார். அந்த லாரியில் ஹரிபிரசாத் மற்றும் அவருடன் மூட்டை தூக்கும் தொழிலாளர்கள் 6 பேர் சென்றனர். மல்லூர் அருகே சந்தியூர் பிரிவு அருகே லாரி சென்ற போது முன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒருவர் நாய் குறுக்கே வந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்தார். அவர் மீது மோதி விடாமல் இருப்பதற்காக லாரி டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
லாரி கவிழ்ந்தது
இதனால் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் கவிழ்ந்தது. இதில் லாரியில் பயணம் செய்த அனைவரும் காயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் படுகாயமடைந்த ஹரிபிரசாத் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து மல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
போராட்டம்
இந்தநிலையில், விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க கோரியும், காயம் அடைந்த 5 தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு தொகை வழங்க வலியுறுத்தியும் நேற்று 100-க்கும் மேற்பட்ட சுமை தூக்கும் தொழிலாளர்கள் சேகோசர்வ் நிறுவனம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு சி.ஐ.டி.யு. சுமை தூக்கும் தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் வெங்கடபதி தலைமை தாங்கினார். இதில் தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தொழிலாளர்கள் போராட்டம் காரணமாக யாரும் வேலைக்கு செல்லாததால் 20 ஆயிரம் மூட்டை சரக்குகள் தேக்கம் அடைந்தது.
Related Tags :
Next Story