சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பிணமாக கிடந்த துப்புரவு பணியாளர்


சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் பிணமாக கிடந்த துப்புரவு பணியாளர்
x
தினத்தந்தி 27 April 2021 6:29 AM IST (Updated: 27 April 2021 6:31 AM IST)
t-max-icont-min-icon

சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் பிணமாக கிடந்தார்.

சத்தியமங்கலம்,

சத்தியமங்கலம் ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு பணியாளர் பிணமாக கிடந்தார்.

துப்புரவு பணியாளர்

சத்தியமங்கலம் அருகே உள்ள குட்டை மேட்டூரை சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 50). இவர் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட செண்பகபுதூர் ஊராட்சியில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்த நிலையில் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக ஊராட்சியில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை சுழற்சி முறையில் இரவு காவலராக பணியாற்ற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
இரவு நேர காவலராக...
அதன்படி பழனிச்சாமி நேற்று முன்தினம் சத்தியமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இரவு நேர காவலராக பணியாற்றினார். இந்த நிலையில் நேற்று காலை 9 மணி அளவில் ஊழியர் ஒருவர் வந்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை திறந்துள்ளார். பின்னர் அவர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் அறைக்கு சென்று உள்ளார்.
அப்போது அங்கு பழனிச்சாமி பிணமாக கிடந்ததை பார்த்தார். உடனே அவர் இதுபற்றி ஊராட்சி ஒன்றிய மேலாளர் மணிவண்ணனிடம் கூறினார். அதைத்தொடர்ந்து அவர் அங்கு வந்து பார்த்து, சத்தியமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார்கள்.
கீழே விழுந்து சாவு
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், ‘பழனிச்சாமிக்கு ஏற்கனவே நெஞ்சுவலி இருந்துள்ளது. இதற்கு அவர் மருந்து, மாத்திரை சாப்பிட்டு வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு பணியில் இருந்தபோது அவர் மருந்து, மாத்திரை சாப்பிடுவதற்காக எழுந்துள்ளார். அப்போது நிலைதடுமாறி அவர் கீேழ விழுந்ததில் அடிபட்டு படுகாயம் அடைந்து இறந்துள்ளார்’ என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்த பழனிச்சாமிக்கு பழனியம்மாள் (48) என்ற மனைவியும், சாம்சன் (30) என்ற மகனும், சங்கீதா (28) என்ற மகளும் உள்ளார்கள்.

Next Story