சித்ரா பவுர்ணமியான நேற்று கொரோனா பரவலால் கோவில்களில் தரிசனத்துக்கு தடை- பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
கொரோனா பரவலால் கோவில்களில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்ரா பவுர்ணமியான நேற்று பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
ஈரோடு
கொரோனா பரவலால் கோவில்களில் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் சித்ரா பவுர்ணமியான நேற்று பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
சென்னிமலை முருகன் கோவில்
கொரோனா 2-வது அலை தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 20-ந் தேதி முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கை அறிவித்தது. ஆனால் கொேரானா பரவல் மேலும் தீவிரமடைந்ததால் தமிழக அரசு நேற்று முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்கள் தரிசிக்க அனுமதி மறுப்பு உள்ளிட்டவை கூறப்பட்டு இருந்தது.
ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் உள்ளது. இங்கு நேற்று சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் எதுவும் இல்லாமல், வழக்கமாக நடைபெறும் 6 கால பூஜைகள் மட்டும் நடைபெற்றது.
பக்தர்கள் ஏமாற்றம்
இதையொட்டி சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். ஆனால் கோவில் நிர்வாகம் சார்பில் படிக்கட்டுகள் வழியாகவும், தார் சாலை வழியாகவும் பக்தர்கள் யாரும் செல்லாத வகையில் அடிவாரத்திலேயே தடுப்புகள் அமைக்கப்பட்டு் இருந்தது. இதனால் கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
மேலும் குல தெய்வ கோவில்களில் தங்களது குழந்தைகளுக்கு மொட்டை அடித்துவிட்டு குழந்தைகளோடு முருகனை தரிசிக்க வந்த பக்தர்களும் அடிவாரத்தில் உள்ள சித்தி விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.
கொடுமுடி
இதேபோல் கொடுமுடி மகுடேஸ்வரர் வீரநாராயணப் பெருமாள் கோவில் நடை அடைக்கப்பட்டது. இதனால் காவடி எடுத்து வந்த பக்தர்கள் கோவில் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபாடு நடத்தினார்கள்.
கோபி
கோபியில் பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் கோவில், பவளமலை முத்துக்குமாரசாமி கோவில், பச்சைமலை சுப்பிரமணியசாமி கோவில், சாரதா மாரியம்மன் கோவில், ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் நடை சாத்தப்பட்டன. ஆனால் வழக்கம்போல பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை.
அந்தியூர்
அந்தியூர் தேர் வீதியில் அமைந்துள்ள பேட்டை பெருமாள் கோவிலில் சித்ரா பவுர்ணமி தினத்தை முன்னிட்டு சீனிவாச பெருமாள் திருப்பதி அலங்காரத்தில் ஸ்ரீதேவி-பூதேவியுடன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். தொடர்ந்து தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டன. அனுமதி இல்லை என்பதால் பக்தர்கள் கோவிலின் வெளியே இருந்து சாமியை தரிசனம் செய்தனர்.
அந்தியூர் பஸ் நிலையம் அருகே உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின்னர் அம்மனுக்கு பச்சை பட்டு அணிந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. பக்தர்கள் கோவிலில் வெளிப்புறத்தில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
செல்லீஸ்வரர் கோவில்
அதேபோல் அந்தியூர் சிவசக்தி நகரில் உள்ள செல்லீஸ்வரர் கோவில், கோட்டை பெருமாள் கோவில், ஆலாம்பாளையம் எழுதிய மரத்தையன்கோவில், எண்ணமங்கலம் கோவிலூர் செலம்பூர் அம்மன் கோவில், தவிட்டுபாளையம் சீனிவாச பெருமாள் கோவில், புதுப்பாளையம் குருநாதசாமி கோவில் உள்பட பல்வேறு கோவில்களில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டன. கோவில் முன்பு நின்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
அம்மாபேட்டை
சித்ரா பவுர்ணமியையொட்டி அம்மாபேட்டை மீனாட்சி உடனமர் சொக்கநாதர் கோவில், நெரிஞ்சிப்பேட்டை செல்லாண்டியம்மன், காசி விசுவநாதர் கோவில், குருவரெட்டியூர் கைலாசநாதர் கோவில், பட்லூர் வாகீஸ்வரர், ஒலகடம் உலகேஸ்வரர், கோவில்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றனர். அப்போது கோவில்கள் நடை சாத்தப்பட்டு கிடந்ததால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்தனர். நடை சாத்தப்பட்டாலும் கோவில்களில் தினமும் செய்யப்படும் பூஜைகள் வழக்கம்போல் நடைபெற்றன. இதுகுறித்த அறிவிப்பு கோவில் வளாகத்தில் ஒட்டப்பட்டிருந்தது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக தூய்மை பணியாளர்கள் கோவில்களில் கிருமி நாசினி தெளித்தார்கள்.
ஏமகண்டனூர் ஆட்சியம்மன் கோவில்
கொடுமுடி ஏமகண்டனூர் ஆட்சியம்மன் கோவிலில் சித்திரகுப்தர் விசித்ரகுப்த சமேத எமதர்மராஜர் சன்னதி உள்ளது. இங்கு நேற்று இரவு சித்ரா பவுர்ணமியையொட்டி ராணி பூர்ணாம்பாள் தலைமையில் சிறப்பு ஹோமங்களும், எமதர்மருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரங்களும் நடைபெற்றன. இதில் சமூக இடைவெளியுடன் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்கள்.
Related Tags :
Next Story