முடிதிருத்தும் கடைகள், அழகுக்கலை நிலையங்கள் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும்- கலெக்டர் அலுவலகத்தில் மனு
முடிதிருத்தும் கடைகள், அழகுக்கலை நிலையங்கள் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
ஈரோடு
முடிதிருத்தும் கடைகள், அழகுக்கலை நிலையங்கள் தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது.
மனு
தமிழகத்தில் கொரோனா வைரஸ் மிகவும் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கை அறிவித்து உள்ளது. மேலும் நேற்று முதல் சில புதிய கட்டுப்பாடுகளையும் அரசு அறிவித்துள்ளது.
அதன்படி மாநகராட்சி, நகராட்சி பகுதியில் இயங்க கூடிய சலூன் கடைகள், அழகு நிலையங்களுக்கு (பியூட்டி பார்லர்) அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில் ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர்கள் நல சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து நுழைவுவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் தாங்கள் கொண்டு வந்த மனுவை போட்டனர்.
நிவாரண உதவி
அந்த மனுவில் அவர்கள் கூறி இருந்ததாவது:-
கடந்த வருடம் கொரோனா தாக்கம் காரணமாக முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் 6 மாத காலம் சலூன் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் இந்த தொழிலை நம்பி இருந்த ஏராளமான தொழிலாளர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்தனர்.
அரசு அறிவித்த ரூ.2 ஆயிரம் நிவாரண உதவி கூட ஒரு சிலருக்கு மட்டுமே கிடைத்தது. பெரும்பாலான தொழிலாளர்களுக்கு கிடைக்கவில்லை. சில தொழிலாளர்கள் தற்கொலை கூட செய்து உள்ளனர். இன்னமும் பொருளாதாரத்தில் இருந்து மீளாமல் உள்ளோம்.
மீண்டும் இயக்க...
இந்தநிலையில் கொரோனா பரவல் அதிகரித்து உள்ளதால் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் இயங்கக்கூடிய சலூன் கடைகள் இன்று முதல் (அதாவது நேற்று) அடைக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ள எங்களுக்கு இந்த அறிவிப்பால் மீண்டும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அரசு இந்த அறிவிப்பை மறுபரிசீலனை செய்து ஈரோடு மாநகராட்சி, பவானி, கோபி, சத்தியமங்கலம், புஞ்சை புளியம்பட்டி ஆகிய நகராட்சி பகுதியில் இயங்கக்கூடிய சலூன் கடைகளை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழகுக்கலை நிபுணர்கள்
அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளுடன் நாங்கள் பணி செய்ய தயாராக இருக்கிறோம். அப்படி இல்லை என்றால் நேரக் கட்டுப்பாடுகள் விதித்து சலூன் கடைகளை தொடர்ந்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் அந்த மனுவில் கூறி இருந்தனர்.
இதேபோல் ஈரோடு மாவட்ட அழகுக்கலை நிபுணர்களும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களது வாழ்வாதாரத்தை காக்க வலியுறுத்தியும், மீண்டும் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் அழகு நிலைய கடைகளை இயக்க வலியுறுத்தியும் மனு கொடுத்தனர்.
Related Tags :
Next Story