தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல்


தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல்
x
தினத்தந்தி 27 April 2021 7:55 AM IST (Updated: 27 April 2021 7:57 AM IST)
t-max-icont-min-icon

கோத்திகிரி பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கோத்தகிரி,

கோத்திகிரி பகுதியில் காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதல் காணப்படுகிறது. இதனால் மகசூல் குறைவதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

காலநிலை மாற்றம்

நீலகிரி மாவட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் என 65 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு பலத்த மழையால் அசாமில் தேயிலை விவசாயம் பாதிக்கப்பட்டது. இதனால் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் தேயிலைத்தூளின் தேவை அதிகரித்தது. 

தொடர்ந்து நீலகிரியில் பச்சை தேயிலை விலை அதிகரித்து வந்தது. பின்னர் அசாமில் இயல்பு நிலை திரும்பியதால் நீலகிரியில் பச்சை தேயிலை விலை குறைய ஆரம்பித்தது. தற்போது நீலகிரியில் பச்சை தேயிலை கிலோவுக்கு ரூ.25 வரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

இதற்கிடையே கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் கடந்த சில வாரங்களில் வறட்சியான காலநிலை நிலவியது. ஆனால் தற்போது வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் மழை சரிவர பெய்யவில்லை. இந்த காலநிலை மாற்றம் காரணமாக தேயிலை செடிகளை நோய் தாக்கி வருகிறது.

மகசூல் குறைந்தது

குறிப்பாக அதிகளவில் தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்கி உள்ளதால், பச்சை நிறத்தில் காணப்படும் இலைகள் காய்ந்து சிவப்பு நிறமாக காட்சி அளிக்கிறது. இதனால் விவசாயிகள் பச்சை தேயிலையை பறித்து தொழிற்சாலைகளுக்கு வினியோகிக்கும் அளவு வழக்கத்தை விட குறைந்து உள்ளது. 

தற்போது பச்சை தேயிலைக்கு ஓரளவு கட்டுப்படியகும் கொள்முதல் விலை கிடைத்தாலும், நோய் தாக்குதல் காரணமாக தேயிலை மகசூல் குறைந்து உள்ளதால் விவசாயிகள் நஷ்டம் ஏற்படும் என கவலை தெரிவித்து உள்ளனர்.

கட்டுப்படுத்தும் வழிகள்

இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறும்போது, தேயிலை செடிகளில் சிவப்பு சிலந்தி தாக்குதலை கட்டுப்படுத்த சல்பர், பிராபார்கேட், பாரபீனிக் ஆயில் பயன்படுத்துவது அவசியம். 

வேர்களின் வளர்ச்சிக்கு மணிச்சத்து உரத்துடன் முசூரி பாஸ்பேட், ராக் பாஸ்பேட், சிட்ரிக் அமிலம் கலந்து தழை சாம்பல் உரக்கலவையை இடவேண்டும். வறட்சியின் பாதிப்பை தாங்க உரம், யூரியா, மூரியேட் ஆப் பொட்டாஷ், கிரீன் மிராக்கிள் ஆகியவற்றை தண்ணீருடன் சேர்த்து தெளிக்க வேண்டும் என்றனர்.


Next Story