தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு கொரோனா
நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.
நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்து வரும் பாதிப்பு
நீலகிரியில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இருப்பினும் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும். தற்போது 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 54 பேருக்கு அறிகுறிகள் உள்ளன. 376 பேருக்கு அறிகுறிகள் இல்லை.
அவர்களுக்கு எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அறிகுறிகள் தென்படலாம். கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது.
இதன் மூலம் கொரோனா உறுதியான நபர்களை தொடர்பு கொண்டு உடல்நிலை குறித்து கேட்டறிந்து, ஆக்சிஜன் தேவை என்றால் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
10 பேருக்கு கொரோனா
45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த பணி இதுவரை 47 சதவீதம் நிறைவடைந்து உள்ளது. நீலகிரியில் தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்ட 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களுக்கு பாதிப்பு குறைவாக உள்ளது. 2-வது டோஸ் போட்டுக்கொண்டவர்களுக்கு பாதிப்பு இல்லை. 80 வயதான மூதாட்டி ஒருவர் முதல் டோஸ் போட்டுக்கொண்டு ஆக்சிஜன் உதவி இல்லாமல் சிகிச்சை பெற்று வருகிறார்.
உடல் வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் காலம் தாழ்த்தாமல் உடனே தாமாக கொரோனா பரிசோதனை மேற்கொள்ள முன்வர வேண்டும். ஒரு நாளில் முடிவு கிடைத்துவிடும். தற்போது 9,000 டோஸ் கொரோனா தடுப்பூசி இருப்பு உள்ளது.
1,100 படுக்கை வசதிகள்
பொதுமக்களுடன் அதிகம் தொடர்புடைய வியாபாரிகள், வணிகர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தவறினால் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு, கடைகள் மூடப்படும்.
ஊட்டி, குன்னூரில் ஆக்சிஜன் வசதியுடன் 134 படுக்கைகள் உள்ளது. இங்கு 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஐ.சி.யூ. வார்டில் 3 பேர் உள்ளனர். கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் படுக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது. ஊட்டி இளைஞர் விடுதி, 2 தனியார் பள்ளிகள், குன்னூர், கூடலூரில் தலா ஒன்று என 5 கோவிட் கேர் சென்டர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. தற்போது மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,100 படுக்கை வசதிகள் தயார் நிலையில் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story