மரணத்திலும் இணை பிரியாத தம்பதி மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் சாவு
மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் மாரடைப்பால் உயிரிழந்தார். சாவிலும் இணை பிரியாத தம்பதிகளின் உடல்கள் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது.
திரு.வி.க. நகர்,
சென்னை முகப்பேர் மேற்கு 1-வது பிளாக் காளமேகம் சாலை 4-வது தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 75). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (68). இவர்களுக்கு சரவணன் (52), குமார் (46), ராமு (43) என 3 மகன்களும், லலிதா (50), தேவி (43), புவனேஸ்வரி (40) என 3 மகள்களும் உள்ளனர்.
ராஜேஸ்வரி, உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
நேற்று காலை அவரது இறுதிச்சடங்குகள் நடைபெற்றது. இதில் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் கலந்து கொண்டனர். பின்னர் பாடியில் உள்ள மயானத்தில் தகனம் செய்வதற்காக ராஜேஸ்வரியின் உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
கணவரும் உயிரிழந்தார்
வயது முதிர்வு காரணமாக வீட்டிலேயே மனைவிக்கு இறுதிச்சடங்குகளை நடத்தி விட்டு மூர்த்தி மயானத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். மனைவியின் உடல் மயானத்துக்கு கொண்டு செல்லப்பட்டதும், மிகுந்த சோகத்தில் இருந்த மூர்த்தி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதுபற்றி மயானத்துக்கு சென்றவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து ராஜேஸ்வரியின் உடலை மயானத்தில் வைத்துவிட்டு, அனைவரும் வீட்டுக்கு வந்து மூர்த்திக்கு ஆகவேண்டிய இறுதிச்சடங்குகளை நடத்தினர்.
இதையடுத்து சாவிலும் இணை பிரியாத மூர்த்தி-ராஜேஸ்வரி தம்பதியின் உடல்கள் ஒரே இடத்தில், ஒரே நேரத்தில் தகனம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் இந்த தம்பதியின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் அந்த பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story