10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழப்பு
கோவை
பெரிய ஜவுளி கடைகள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டதால் கோவை மாவட்டத்தில் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
ஜவுளிக்கடைகள் மூடல்
கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, பெரிய ஜவுளி கடைகள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் பணிக்கு செல்ல முடியாமல் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
இது குறித்து கோவை மாவட்ட ஜவுளி கடை உரிமையாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் கூறியதாவது
கோவை நகரில் 13 பெரிய ஜவுளிக் கடைகள் உள்ளன. இதில் 6 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை பார்க்கிறார்கள்.
தற்போது ஜவுளிக் கடைகள் மூடப்பட்டதால் தினமும் ரூ.5 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டு உள்ளது. தொழிலாளர்களும் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
வியாபாரம் பாதிப்பு
எனவே அரசு பெரிய ஜவுளிக் கடைகளை திறக்க விரைவில் அனுமதிக்க வேண்டும். இது தொடர்பாக மாவட்ட கலெக்டர் நாகராஜனிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.
பெரிய ஜவுளிக் கடைகளில் கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்ற தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. ஜவுளிக் கடைகளை மூடினால் துணிகள் தேங்கி சேதம் அடையும். அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்படும்.
மேலும் வியாபாரமும் பாதிக்கப்படும் நிலை உள்ளது. கடந்த ஆண்டு கொரோனா ஊரடங்கின்போது மாவட்டம் முழுவதும் ஜவுளி வியாபாரம் ரூ.700 கோடி அளவுக்கு பாதிக்கப்பட்டது.
தற்போதும் கடைகளை மூட உத்தரவிட்டது கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே பெரிய ஜவுளிக் கடைகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
வரியை ரத்து செய்ய வேண்டும்
இது குறித்து தியேட்டர் உரிமையாளர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது
கோவை மாவட்டம் முழுவதும் 250 தியேட்டர்களில் உள்ளன. அவற்றில் 4 ஆயிரத்துக்கும் மேலான தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
தற்போது தியேட்டர்கள் மூடப்பட்டதால் ஊழியர்கள் வேலை இழந்து தவிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். தியேட்டர் உரிமையாளர்களும் மிகவும் நஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.
எனவே தியேட்டர்களுக்கு மின் கட்டணம் மற்றும் கேளிக்கை வரியை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஜவுளிக்கடைகள் மற்றும் தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளதால் கோவை மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
Related Tags :
Next Story