என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.1 கோடி கையாடல்; மேலாளர் கைது


என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.1 கோடி கையாடல்; மேலாளர் கைது
x
தினத்தந்தி 27 April 2021 10:05 PM IST (Updated: 27 April 2021 10:05 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ரூ.1 கோடி கையாடல் செய்த மேலாளர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 

விழுப்புரம் அருகே கெங்கராம்பாளையத்தில் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் கணக்கு மேலாளராக கடந்த 2010-ம் ஆண்டு முதல் புதுச்சேரி மாநிலம் உருவையாறு மூகாம்பிகை நகர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 56) என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் கடந்த 2018-2019, 2020-2021 ஆகிய கல்வியாண்டில் மாணவர்களிடம் கல்லூரி கட்டணத்தை வரைவோலை அல்லது ஆன்லைன் (கேட்வே பேமெண்ட்) மூலமாகத்தான் வசூல் செய்ய வேண்டும் என்று தெரிந்தும் அவ்வாறு வசூலிக்காமல் பல மாணவர்களிடம் நேரடியாக பணத்தை பெற்றுள்ளார். அவ்வாறு பெற்ற பணத்தை கல்லூரி நிர்வாகத்திற்கு சொந்தமான வங்கி கணக்கில் செலுத்தாமல் வேறொரு கணக்கில் செலுத்தியுள்ளார். மேலும் அவர் கல்லூரிக்கு சொந்தமான வேறு சில வங்கி கணக்குகளில் பணம் செலுத்தியதாக வெறும் பதிவுகள் மட்டும் கணினியில் தட்டச்சு செய்துள்ளார்.

ரூ.1 கோடி கையாடல் 

இந்நிலையில் ஆடிட்டர் மூலமாக கல்லூரியின் வரவு, செலவு கணக்கை ஆய்வு செய்ததில் 2019 முதல் 2021 வரை ரூ.1 கோடியே 18 லட்சத்து 74 ஆயிரத்து 221-ஐ ராமமூர்த்தி கையாடல் செய்திருப்பது தெரியவந்தது.
எனவே போலியான ஆவணங்களை உருவாக்கி பணத்தை கையாடல் செய்த ராமமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்கும்படி கல்லூரியின் தலைவர் ராஜா, விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ராமமூர்த்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் நேற்று புதுச்சேரிக்கு விரைந்து சென்ற போலீசார், அங்கு ராமமூர்த்தியை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரை விழுப்புரம் அழைத்து வந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story